பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. சிலந்தி சிரித்தது

ட்டுரை எழுதுவதற்காகக் கற்பனைப் பறவையின் இறக்கைகளை அவிழ்த்துப் பறக்க விட்டவாறு உச்சி மோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிதைந்த தன் வலையைச் சீர்ப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு சிலந்தி. அதன் செய்கை உலகம் ஒப்பும் ஒரு உண்மையை நினைவுறுத்தியது.

அந்த உண்மை - “உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் வாழ விரும்புகிறது; எப்படியாவது எந்த வழியிலாவது தான் வாழ வேண்டும் என்று நினைக்கிறது.” இல்லாவிட்டால் இந்தச் சிலந்தி பட்டிழையை விட மெல்லிய மின்னும் இழைகளைக் கொண்டு அழகாக மாயவலை பின்னி அதிலே பல சிறு உயிர்களைச் சிக்க வைத்து அவைகளின் உயிர்களைப் போக்கி உண்டு மகிழுமா?”

இந்த உலகப் படைப்பே எனக்கு விசித்திரமாக விடுவிக்க முடியாத புதிராகத் தோன்றியது; பதுங்கும் புலிக்குப் பாய்ந்தோடும் புள்ளி மான் இரையாகிறது. வாழ நிற்கும் கொக்கிற்கு நீரில் ஒடி விளையாடும் மீன் இரையாகிறது. ஒருவன் உழைத்துச் சாக, மற்றொருவன் உண்டு மகிழ்ந்து உப்பரிகையிலே உலாவுகிறான். இப்படித்தானே உலகம் நடை போடுகிறது. இயற்கையின் போக்கே இப்படித்தானோ? இயற்கையின் போக்கு இப்படி இருந்தால் விட்டு விடலாமா?. ஒன்றின் உயிரும், உழைப்பும் மற்றொன்றின் உணவிற்கும் உல்லாசத்திற்கும் உறைவிடமாக அமையத்தான் வேண்டுமா?

இவ்விதமாக வினாக்களை எழுப்பி அதற்கு விடை கண்டு கொண்டிருக்கையில் “அண்ணா! அண்ணா!! - நரி நரி” என்று படத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் ஓடி வந்தான் ஏழாண்டுகள் நிரம்பிய என் தம்பி. படத்தைப் பார்த்தேன். மிக அழகாக இருந்தது. அதை ஒரு ஆற்றல் மிகுந்த ஒவியன்தான் தீட்டி இருக்க வேண்டும். வண்ணச் சேர்க்கையைச் சரியாகக் கூட்டிக் குழம்பாக்கி ஒளி விடும் ஒவியமாக அவன் அந்த எழிலுருவைச் சமைத்ததற்காக மட்டும் நான் அவனைச் சிறந்த ஓவியக் கலைஞனாகக் கருதவில்லை. அவன் அந்த ஒவியத்தை அதன் நிலைக்கேற்ப உணர்வுகளை வெளியிடுமாறு வரைந்திருந்தான். அந்த ஒவியத்தில் நரியோடு நண்டும் இடம் பெற்றிருந்தது. ஆனால் எங்கே?

நரியின் வாயில் சிக்கிக் கொண்டு தன் உயிர்ப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் நரியோ தன் கண்களின் விஷமச் சிரிப்பைச் சிந்த விட்டு அது படும் துன்பத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தது! எப்படி இருக்கிறது. ஒவியத்தின் முழு உருவம்.