பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / கடல் கறுப்பா? நீலமா? : 269

கடலைப் பூமியாக வைத்துக் கொண்டு பிழைக்க வேண்டிய சிறுவன் பிறந்த நாளிலிருந்து கடலையே பார்க்காமல் வளர்ந்து விட்டானே என்று ஏங்கினான் சூசை.

"இந்த வருசம் லீவிலே உன்னைக் கட்டாயம் ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன். அப்ப கடலைப் பார்க்கலாம். என் கூடக் கட்டு மரத்திலே உட்கார்ந்து கடலுக்குள்ளேயே நீ வரலாம். எல்லாம் பழக்கிக் கொடுத்திடுவேன் உனக்கு”

"அப்புறம் இங்கே படிக்கவே வரவேண்டாமா தாத்தா?”

‘'எதுக்கு வரணும் ராசா? நான்தான் உனக்காக நிறைய கட்டுமரம், வலை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேனே?”

“படிப்பை நிறுத்திட்டால் சகரியாஸ் தாத்தா கோபிக்க மாட்டாங்களா?”

“மாட்டாங்க!”

"அப்படியானால் சரி தாத்தா!'

“ஊருக்கு வரவரைக்கும் சமர்த்தாப் படிச்சிட்டிருக்கணும் கண்ணு!”

“அங்கே வந்தா தினந்தினம் சமுத்திரத்தைப் பார்க்கலாமில்லையா தாத்தா?”

“நிறையப் பார்க்கலாம்.”

சூசை சிரித்துக் கொண்டான்."ஏண்டா! நீ பாதிரியாருக்குக் கடிதாசு எழுதினியா?”

பையன் தலையைக் குனிந்து கொண்டு பதில் சொன்னான்; "ஆமாம்! சமுத்திரம் பார்க்க ஆசையாயிருக்குதுன்னு கடிதாசு எழுதினேன்.”

“எனக்கு எழுதப்படாதா நீ? அவருக்கு எதற்கு எழுதினாய்?"

சிறுவன் மெளனம் சாதித்தான். அன்று மாலை சூசை ஊருக்குப் புறப்படும்போது பேரப்பிள்ளை தாத்தாவிடம் மறுபடியும் சமுத்திரத்தைப் பற்றிப் பேச்சை எடுத்தான்.

“தாத்தா! சமுத்திரம் நீல நெறம்னு பாடத்திலெல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்க ஆனா பூகோளப் புத்தகத்தில் சமுத்திரத்தின் படம் பார்த்தா ஒரே கறுப்பா இருக்குது?”

“போட்டோவில் கறுப்பாகத்தான் விழுந்திருக்கும். நேரிலே பார்த்தால் நீலமாக இருக்கும்.”

“அது ஏன் தாத்தா நீலமா இருக்கிற சமுத்திரம் போட்டோவிலே மாத்திரம் கறுப்பா விழணும்?” சூசை பதில் கூறத் தெரியாமல் விழித்தான்.

“எனக்குத் தெரியாதுடா தங்கம்! நான் அதெல்லாம் படிக்கலை. உங்க வாத்தியாரையே கேட்டுத் தெரிஞ்சுக்க” என்று பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டான் சூசை'

“பயலுக்கு மூளைக்கூர் நிறைய இருக்குது. தொளைச்சுத் தொளைச்சில்ல கேள்வி கேட்கிறான்?” என்று மனதுக்குள் பேரப்பிள்ளையின் அறிவை மெச்சிக்கொண்டான் சூசை. அடுத்த முறை வரும்போது சமுத்திரம் பார்க்க அழைத்துப் போவதாகப் பையனுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டுக் கிழவன் ஊர் திரும்பினான்.