பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

திரும்பும்போதுதான் அந்தக் கிழவனின் மனத்தில் எத்தனை எதிர்காலக் கனவுகள்? அவனுடைய பேரன் கடலில் கட்டுமரம் செலுத்திச் செல்வதாகவும், வலை வீசுவதாகவும், திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து மகிழ்ந்தது அவன் மனம்.

சில மாதங்கள் கழிந்தது. எந்த வருடமும் இல்லாத கோடை மழை அந்த வருடம் திருநெல்வேலியில் வெளுத்து வாங்கியது. இடியும், மின்னலும் தினம் ஒரு கட்டடத்தையோ மரத்தையோ பலி வாங்கிக் கொண்டிருந்தன.

பாளையங்கோட்டையில் சிறுவர் விடுதி இருந்த பகுதியில் மாமரங்கள் அதிகம். சாயங்கால வேளையில் சிறுவர்கள் மாமரத்தடியில் விளையாடிப் பொழுது போக்குவது வழக்கம். மரக்குரங்கு, பச்சைக் குதிரை என்று அவரவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். மாமரங்கள் தணிவாகப் படர்ந்து வளர்ந்திருந்தன. அவை விளையாட ஏற்ற நிலையிலிருந்தன.

அன்றொரு நாள் மாலை சூசையின் பேரனும், இன்னும் நாலைந்து பையன்களுமாக ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு தணிவான மாமரத்தில் மரக்குரங்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். -

விளையாட்டில் பிடிக்கவேண்டிய கட்சிப் பையன்கள் கீழே இருந்து பிடிக்கவேண்டும். பிடிபடவேண்டிய கட்சியார் மரக்கிளைகளில் ஒளிந்திருப்பார்கள். சூசையின் பேரன் பிடிபட வேண்டிய கட்சி. மரத்தின் உச்சிக்கிளையொன்றில் ஏறி ஒளிந்து கொண்டிருந்தான் அவன். விளையாட்டு, கெடுபிடியாக நடந்து கொண்டிருந்தது.

அண்டமுகடு தவிடு பொடியாகி விடுவதுபோல் ஒரு பேரிடி அடுத்த கணம் கோபம் கொண்ட வாத்தியார் கரும் பலகையில் சாக்பீஸால் கோடு கிழப்பதுபோல் பளிரென்று வானில் ஒரு மின்னல் நெளிந்தது. மேலே பார்த்துக் கொண்டு மரக்கிளையில் உட்கார்ந்திருந்த சூசையின் பேரனுடைய கண்களுக்குள் நெருப்புப் பாய்ந்த மாதிரி ஒரு அதிர்ச்சி பரவியது. 'வீல்’ என்று அலறிக்கொண்டே அரக்கிளையிலிருந்து சுருண்டு கீழே விழுந்தான் பையன். கையிலும் காலிலும், உடம்பிலும் மரத்தில் சிராய்த்துக் காயங்கள் பட்டிருந்தன.

மற்ற சிறுவர்கள் அரண்டு ஒடிப்போய் விடுதி வார்டனிடம் கூறினார்கள். வார்டனும், மற்றவர்களும் ஓடிவந்து சூசையின் பேரனைத் துரக்கிக் கொண்டு போனார்கள்.

மூர்ச்சை தெளிவித்ததும் விடுதி டாக்டர் வந்தார். பையனைப் பரிசோதித்தார். வார்டனைத் தனியாக அழைத்துப் போய், "பையனுக்கு மின்னலில் கண் பார்வை போய் விட்டது” என்று கூறினார் டாக்டர். சூசைக்கும், சகரியாஸ் பாதிரியாருக்கும் செய்தியை அனுப்பினார் வார்டன். அந்தச் சிறுவனுக்கு மட்டும் தனக்கு என்ன ஆயிற்று என்பதே விளங்கவில்லை. "மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டோம்" என்பதை மட்டுமே அவன் உணர்ந்திருந்தான். சீக்கிரமே தனக்குக் கண் பார்வை வந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது.