பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / கடல் கறுப்பா? நீலமா? 271

“எனக்கு எப்போது சார் கண் பார்க்கவரும்?” என்று அவன் வார்டனிடம் கேட்ட போது கூட அவர்,"உனக்குக் கூடிய சீக்கிரம் கண் வந்துவிடும் தம்பி கவலைப்படாதே" என்று உறுதியாகப் பதில் சொல்லியிருந்தார். பையன் ஏமாற்ற மடைந்துவிடாமல் அவனைக் காக்கவே அவர் அப்படிப் பொய் சொல்லியிருந்தார். ஆனால் சிறு பையன். பாவம்! அதை உண்மைதான் என்றே நம்பிக்கொண்டிருந்தான்.

சூசையும், சகரியாஸ் பாதியாரும் பாளையங்கோட்டைக்கு ஒடோடி வந்தார்கள். டாக்டரும், வார்டனும் முன்னெச்சரிக்கையாக அவர்கள் இருவரிடமும், “சிறு பையனாக இருப்பதால் கூடியவரையில் அவன் குருடனாகப் போய்விட்டானென்ற’ உண்மையை அவனுக்குத் தெரியவிடாமல் கொஞ்ச நாளைக்கு மறைத்து வைத்துக் கொண்டே பழகுங்கள். அவனுக்கு முன்பே அழுதோ கதறியோ உண்மையைக் கூறி மனம் ஒடிந்து போகும்படி செய்துவிடக் கூடாது' - என்று சொல்லியிருந்தார்கள்.

சூசையும், பாதிரியாரும் அப்படியே நடந்துகொள்ள அவர்களிடம் ஒப்புக்கொண்டனர்.

பையனை விடுதியிலிருந்து சூசையோடு அனுப்பி விட்டார்கள்.

சூசை பையனை பாளையங்கோட்டையிலிருந்து ஊருக்கு அழைத்து வரும்போது பஸ்ஸில் அவன் தாத்தாவைக் கேட்டான்.

“தாத்தா எனக்குக் கண் வந்ததும் சமுத்திரம் பார்க்கணும், பூகோள புத்தகக்காரன் கடலை கறுப்பாய்ப் போட்டிருக்கான். அசல் நீல நெறக் கடலை நான் பார்க்கணும்”

கிழவன் சூசை சிறுவனுக்கு என்ன பதில் கூறுவான்? வெடித்துப் பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டான். பாதிரியார் அவன் அழுதுவிடாமல் அவனைச் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினார்.

மணவாளக் குறிச்சியில் வந்து இறங்கியபோது பஸ் நிற்குமிடத்தில் சூசை டானியலைச் சந்தித்தான்.

‘டானியல்! என்னுடைய பத்து கட்டுமரங்களையும், மூன்று பாய்மரத் தோணிகளையும், இரண்டு வள்ளங்களையும், ஏழு வலைகளையும், பழைய விலைக்கு விற்கப்போகிறேன். நீ வேண்டுமானால் வாங்கிக்கொள்:”

"ஏன்? உன் பேரப்பிள்ளை.' எதையோ கேட்க ஆரம்பித்தான் டானியல். அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டு அங்கே நிற்காமல் கையில் பேரனைப் பிடித்துக் கொண்டு சகரியாஸ் பாதிரியருடன் சர்ச்சை நோக்கி நடந்தான் சூசை.

“தாத்தா! ஏதோ ஒசை பெரிசாக் கேட்குதே சமுத்திரமா?” என்று நடந்து கொண்டே காதிற் புலனாகிய ஓசையைப் பற்றி விசாரித்தான் பேரன். சூசை பதில் சொல்லவில்லை. எதிரே எல்லையற்று விரிந்திருந்த நீலக்கடலை மிகுந்த வெறுப்போடு பார்த்தான் அந்தக் கிழவன்.

(கல்கி, 29.3.1959)