பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தன்மானம் ★ 273



தங்கப்பிரேம் பிடித்த மூக்குக் கண்ணாடியும், தும்பைப் பூக் கதருமாக, எதிரே உட்கார்ந்திருக்கும் அந்தப் பெரிய மனிதரை நிமிர்ந்து பார்த்தான் ஏகாம்பரம். பணத்தின் கம்பீரமும் கெளவரத் தோற்றமும், இணைந்த அந்த மனிதரைப் பார்க்கும்போதே தாழ்வு மனப்பான்மையும் பயமும் தன்னையறியாமலே அவனுக்கு உண்டாயிற்று. தன்னுடைய அழுக்கடைந்த அறைக் கை நாற்காலி, கந்தலும், கூளமுமாக இறைப்பட்டுக் கிடக்கும் புத்தகங்கள் எல்லாம் இருந்தாற்போலிருந்து வெறுக்கத்தக்க, கீழ்த்தரமான பொருள்களாக மாறிவிட்டது போல் அவன் மனம் அப்போது நினைத்தது. திருச்சிற்றம்பலம் என்ற செல்வச் செழிப்புக்கு முன்னால் தன் ஏழ்மையைக் காட்டிக் கொடுக்கும் அவமானச் சின்னங்களாக அவை தோன்றித் தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டதுபோல் ஒரு கசப்பு ஏற்பட்டது.

ஜன்னல் விளிம்பில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருந்த திருச்சிற்றம்பலம் ஏகாம்பரத்தின் முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்."ஏகாம்பரம்! குழந்தைகள், மனைவி எல்லோரும் சுகமா?”

“சுகம்தான் ஐயா!” வெகு நாள் பழகிய குடும்ப நண்பர்போல் அவ்வளவு ஒட்டுறவுடன் அவர் விசாரித்த வியப்புத் தாங்கிக் கொள்ள முடியாமல் கனத்தது ஏகாம்பரத்திற்கு.

“சமீபத்தில் நீங்கள் எழுதி வெளிவந்த புத்தகத்துக்குப் பேர் என்ன?” இந்தக் கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. அவன்தான் எழுத்தாளன் என்பதுகூட இவ்வளவு பெரிய மனிதருக்குத் தெரிந்திருக்கிறதே!

“போன மாதம் வெளிவந்ததே. அந்த நாவலைக் கேட்கிறீர்களா?”

"ஆமாம், ஆமாம்! அதுதான். என்னவோ ‘ஊழிப்புயல்’ என்று பேர் சொல்லிக் கேட்ட மாதிரி ஞாபகம். ஊரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் பற்றியே பேச்சாயிருக்கிறதே?”

“அவ்வளவு பெருமைப்படுத்திப் பேச அந்தப் புத்தகத்தில் ஒன்றுமே இல்லை. என்னவோ தோன்றியது - எழுதினேன்.”

"அப்படிச் சொல்லாதீர்கள், ஏகாம்பரம். யானைக்குத் தன் பலம் தெரியாது என்பார்கள். நீங்கள் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் மக்களிடையே கிளர்ச்சி மூட்டுகிறதென்றால் அது சாதாரண எழுத்தாயிருக்க முடியாது! ஊரறிய உங்களைக் கெளரவப்படுத்துகிறதற்கு ஏற்பாடு செய்யப் போகிறேன் நான்” .

"நான் அத்தனை தகுதியுடையவனில்லை. ஏதோ என் எழுத்தை நாலு பேர் மனமாரப்படித்து மகிழ்ந்துகொண்டிருப்பதே எனக்குக் கெளரவம்தான்” என்று கூறிக் கொண்டே எழுந்து அலமாரியருகே போய் ‘ஊழிப்புயல்’ நாவலின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டுவந்து, பயபக்தியோடு அவரிடம் கொடுத்தான் ஏகாம்பரம். எழுந்து நின்று இரண்டு கைகளையும் நீட்டி மரியாதையாக அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார் திருச்சிற்றம்பலம்.அதுமட்டுமா? கோவிலில் கிடைத்த தெய்வப் பிரசாதம்

நா.பா. 1- 18