பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



போல் மதித்து இரண்டு கைகளாலும் புத்தகத்தை மேலே உயர்த்திக் கண்களில் ஒத்திக்கொண்டார்.

அவருடைய செயல்களைப் பார்த்து ஏகாம்பரம் மலைத்தான். ‘இவ்வளவு பெரிய செல்வச் சீமானுக்குத் திடீரென்று வீடு தேடி வந்து என்னைப் பாராட்டத் தோன்றியதன் காரணமென்ன? இத்தனை நாளாக என்னைப் புறக்கணித்து வந்த அதிர்ஷ்டதேவதை கண் திறந்து என் பக்கமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டாளா?’ என்று பலவிதமான நினைவுகள் அவனுக்கு உண்டாயின. வறுமை வெப்பத்தால் நம்பிக்கை வறண்டு போய்க் கிடந்த தனது நெஞ்சத் தடத்தில் யாரோ பன்னீரைத் தெளிக்கிற மாதிரி அந்தச் சமயத்தில் அவன் உணர்வுகளில் ஒருவகைக் குளிர்ச்சி பரவியது. கட்டுக்கடங்காத பெருமைக்குத் தான் ஆளாகிவிட்டதுபோல் ஒரு பூரிப்பை அவன் அவருக்கு முன் தனக்குத்தானே உணர்ந்தான்.

"ஏகாம்பரம்! வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த மாபெரும் நாவலை எழுதிய உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப்போகிறேன். விழா இந்தப் பேட்டையிலுள்ள பள்ளிக்கூடத்து மைதானத்தில் நடக்கும். மறுக்காமல் நான் அளிக்கும் இந்த மரியாதையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

ஏகாம்பரம் தன் செவிகளில் கேட்கிற மேற்படி வார்த்தைகள் உண்மைதானா என்று ஐயமடைந்தான். திருச்சிற்றம்பலத்தின் திருவாயிலிருந்தா இந்த வார்த்தைகள் வெளிவருகின்றன? திடீரென்று அத்தி பூத்தாற்போல் வந்தார், பார்த்தார். புத்தகத்தை வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டார். இப்போது என்னடாவென்றால், “வருகிற ஞாயிற்றுக்கிழமை உனக்குப் பாராட்டு விழா” என்று சொல்லி என்னைத் திணற அடிக்கிறார்! எல்லாம் சொப்பனத்தில் நிகழ்கிற மாதிரியல்லவா வேகமாக நடக்கிறது!

"கட்டாயம் நீங்கள் இதற்கு இணங்கித்தான் ஆக வேண்டும். யோசிக்காதீர்கள். வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக இந்த நாவலைப் படித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போகிறேன். ஊரெல்லாம் இதைப் பற்றியே பேச்சாக இருக்கிறது.”

ஏகாம்பரம் அவருடைய வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொண்டே தலையைக் குனிந்து கீழே பார்த்தான். தரை அவனைப் பார்த்து நகைத்தது. வலுவில் தேடி வருகிற சீதேவியைக் காலால் உதைக்க முடியாது. சபலம் யாரை விட்டது? நீண்டநேர வற்புறுத்தலுக்குப் பின் விழாவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டுவிட்டான் ஏகாம்பரம்.அவர் விடைபெற்றுக் கொள்ளும்போது,"ஏகாம்பரம்! ஞாயிற்றுக்கிழமை மாலையில் விழா, உங்களை அழைத்துக்கொண்டு வர கார் அனுப்புகிறேன், வந்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவ்வளவுதான்! மறுநாள் காலையிலிருந்து அந்தப் பேட்டையே அமர்க்களப்பட்டது. ‘பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்துக்குப் பாராட்டுவிழா’ என்று மூவர்ண நோட்டீஸ் சுவர்களிலெல்லாம் பெரிது பெரிதாக ஒட்டப்பட்டிருந்தன. தினப்பத்திரிகைகளெல்லாம் ஏகாம்பரத்துக்கு விழா நடத்தும் திருச்சிற்றம்பலத்தைப் பாராட்டி உபதலையங்கம் எழுதியிருந்தன. எங்கே திரும்பினாலும் ஏகாம்பரத்திற்கு