பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / தன்மானம் ★ 275



விழா நடத்தப்போகும் திருச்சிற்றம்பலத்தின் பெருந்தன்மை முழங்கிற்று. திருச்சிற்றம்பலத்தின் புகைப்படத்தை எல்லாப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. புகழ்ந்து எழுதின. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு பத்திரிகையாவது ஏகாம்பரத்தின் படத்தைப் பிரசுரிக்கவில்லை. அவனுடைய எழுத்துத்திறமையைப் பற்றியும் அதிகம் எழுதவில்லை. எல்லா இடத்திலும் திருச்சிற்றம்பலத்தின் புகழ்தான் பரவியது. மூவர்ணச் சுவரொட்டிகளில் கூட, "திருச்சிற்றம்பலம் நடத்தும் ஏகாம்பரத்தின் பாராட்டு விழா” என்று அவருடைய பெயருக்குத்தான் முதன்மை கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் ஏகாம்பரம் உள்பட எவருக்கும் இதெல்லாம் ஒன்றும் வித்தியாசமாகப் படவில்லை. ‘இவ்வளவு சிரமப்பட்டு இத்தனை பெரிய விழா நடத்துகிறவர் பேரைக்கூடப் போட்டுக்கொள்ளாமலா இருப்பார்?’ என்று எண்ணிக் கொண்டு மன அமைதி பெற்றார்கள்.

ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. விழா நிகழ இருந்த பள்ளிக்கூட மைதானத்தில் நிறையப் பணம் செலவழித்துப் பிரமாதமான பந்தல் போடப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி இசை முழங்கிற்று. ஜே!ஜே! என்று பெருங்கூட்டம். மேடையில் பிரமுகர்கள் புடைசூழத் திருச்சிற்றம்பலம் உட்கார்ந்திருந்தார். ஏகாம்பரத்தை அழைத்து வரத் திருச்சிற்றம்பலத்தின் கார் போயிருந்தது.எல்லோரும் ஏகாம்பரத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

மாலை மணிமூன்றரை.இருப்பதற்குள் கிழிசலில்லாததும், வெள்ளையானதுமான ஜிப்பா ஒன்றைப் போட்டுக் கொண்டு வீட்டு வாசலில் காத்திருந்தான் ஏகாம்பரம். அழகான அந்தப் பெரிய கார் ஒயிலாகத் திரும்பி அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது. டிரைவர் கீழே இறங்கினான். அவன் முகமலர்ச்சியோடு ஏகாம்பரத்தினருகில் வந்து, "சார்! அது நீங்க எழுதின புத்தகமா? ரொம்ப நல்லாருக்குது சார். நான் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே மூச்சிலே படிச்சு முடிச்சுட்டேன்” என்றான்.

“எந்தப் புத்தகத்தைச் சொல்றே?” என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் ஏகாம்பரம். உடனே டிரைவர் காரின் கதவைத் திறந்து தன்னுடைய ஸீட்டின் கீழிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினான். அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் ஏகாம்பரம், “ஏனப்பா இது உன்னிடம் எப்படி வந்தது? உன் முதலாளிக்கல்லவா இதை நான் அன்பளிப்பாகக் கொடுத்தேன்? நீ அவரிடம் கேட்டு வாங்கிப் படித்தாயா?” என்று திகைப்புடன் டிரைவரிடம் கேட்டான். டிரைவர் ஒரு தினுசாகச் சிரித்தான்.

“அவருக்கு இதெல்லாம் படிக்க நேரம் ஏதுங்க?. உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்தவரு இதைக் காரிலேயே மறந்து போட்டிட்டுப் போயிட்டாரு. நான் எடுத்துப் படிச்சதுலே நல்லதாப் பட்டது! வச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் அவரும் கேட்கவே இல்லை.”

சுளீரென்று நெஞ்சில் சவுக்கடி விழுந்தது போலிருந்தது ஏகாம்பரத்துக்கு. தன்மானம் கொதித்தது. நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு மேலெழும்பித் துடித்தது.

"ஐயா! உலகந் தெரியாத ஆளா இருக்கீங்களே? முனிசிபல் எலெக்ஷன் வருது. அந்தப் பேட்டையிலே முதலாளி நிக்கப் போறாரு. நாலுபேரு தன்னைப் பெரிசா