பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



ஒவியத்தின் கீழே உள்ள வரிகளைப் படித்தேன். ‘நரிக்குக் கொண்டாட்டம், நண்டுக்குத் திண்டாட்டம்’ என்றிருந்தது.அந்த இரண்டு வரிகளில் அழகும் அர்த்தமும் பொதிந்து கிடப்பதைக் கண்டு வியந்தேன். வியப்பிற்குப் பிறகு என் இதழ் இணைகள் விரிந்து ஏளனச் சிரிப்பைச் சிந்தின. ஏன்?.

“ஸார்! பேப்பர்!" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். பையன் செய்தித்தாளைப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தான். எடுத்துப் பார்த்தேன். பசுமையான இலைகளின் நடுவே வண்ண மலர்கள் எளிதில் தெரிவதைப் போல் அதிலிருந்த பெரிய எழுத்துக்கள் முதலில் தெரிந்தன. வாய்விட்டு தலைப்பை வாசித்தேன். ‘கோரக் கொலை!’ சிறு நிலத்தின் காரணமாக வாய்ச்சண்டை வளர்ந்து வாழ்வை முடித்துக் கொண்ட அதிசயம் என்றிருந்தது.

அறியாமை காரணமாக அழித்தொழித்துக் கொண்ட மக்களுக்காக அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது சிரிப்பொலிகேட்டது. சுற்றிலும் பார்த்தேன்; யாரையும் காணவில்லை. ஆனால் அந்தக் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. எப்படி?...

'மழையின்மையின் காரணமாக வயல்கள் எல்லாம் வறண்டு வெடித்துப் பாழ்நிலமாகக் கிடக்கின்றன. அதனால் சிறிதும் பயனில்லை. அந்த நிலையிலேகூட இந்த மக்களுக்கு நிலத்தாசை விடவில்லை. வரப்பைப் பெயர்த்து ஒரு அடி தள்ளி அடுத்தவன் நிலத்தில் வரப்பிடுகிறான். ஏன்?...பின்னால் எப்பொழுதோ ஒரு காலத்தில் மழை பெய்து விளையும்போது அதிக விளைவைப் பெற்றுச் சுகமடைவதற்கு! வரப்பைத் தள்ளிப்போடத் தெரிந்தவனுக்கு சினத்தைத் தள்ளிப்போடத் தெரியவில்லை. சுகமாக வாழ வரப்பைப் பெயர்த்தான். ஆனால் வாழ்ந்தானா?...

ஆறறிவு படைத்த மனிதனே அதிசயப் பிராணியாக இருக்கிறானே! அவனுக்கே தெரியாதபொழுது ஐயறிவு படைத்த விலங்குகளும் பூச்சிகளும் உயிர் வாழ் அவசியமான உணவிற்காகக் கொன்று கொள்வதைப் பற்றி வருந்துகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா? என்று அந்தக் குரல் பலமாக நகைத்தது.

உச்சிமேட்டில் ஒலி வந்த திசையை நோக்கினேன்.யாரையும் காணவில்லை.அந்தச் சிலந்தி தன் வலையின் நடுவே இருந்தவாறு மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது. ஆம்! அந்தச் சிலந்திதான் சிரித்துப் பேசி இருக்க வேண்டும். அதைத் தவிர வேறு ஒருவரும்தான் இல்லையே.

நான் வெட்கிப் போனேன் - 'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை’ என்ற குறள் மருந்தை நாடிக் குணமடையாமல் மக்கள் குத்திக் கொண்டு சாகிறார்களே என்றுதான்.

(தமிழ்ப் பொழில், ஜூன் 1954)