பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கைப் பற்றிக் கரை சேர்க்க முடியாமல் தவித்துப் பின்னர் நம்மிருவரையும் ஆங்கிருந்தோர் கரை சேர்த்ததும் கண்ணே! என் உயிர்ச்சுழலுக்கு உவமை காட்டியதே!

பின்னர் நீயின்றேல் நனில்லை என்ற முடிவுக்கு நான் வந்ததும், என் அன்னையிடம் அதனைக் கூறுவதற்குத் தவித்த தவிப்பும் என் தங்கமே! இன்னும் என்னை நகைக்க வைக்கிறது. பிறகுதானே கண்ணே! நமக்கு எதிர்ப்பு ஆரம்பமானது. என்னால் இடர்ப்பட்ட உன் தாய் மாமன், உன் தாயை அணுகி உன்னைத் தனக்குத் தருமாறு கேட்டதும், உன் தாயும் உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அதற்கு ஒப்புதல் தந்ததும் பிறகு நீ என்னைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று உறுதியாகக் கூற, அந்த உறுதியை உனக்கு உற்ற துணையாக விட்டுவிட்டு நான் வேற்றூர்க்கு வேலையின் நிமித்தம் வந்ததும் என்னால் மறக்கவே முடியாத நிகழ்ச்சிகள்.

நான் வேலை பார்த்த அலுவலகத்தின் அதிகாரி உன் தாய் மாமனின் உற்ற தோழனாம். ஒரு நாள் தோழனைக் காண வந்தவன் உன்னைக் கண்டதும் திடுக்கிட்டடான். திடுக்கிட்டவன் பின்னர் தீராப் பார்வையை என் மேல் வீசினான். கலங்கினேனில்லை கண்ணே! அன்று மறு நாள் என்னை வேலையை விட்டு நீக்கிய உத்தரவுக் கடிதத்தைச் சுமந்து கொண்டிருந்தேன். எதிர்பார்த்தேன் ஏந்திழையே இந்த நிகழ்ச்சியை ஏசலும் எதிர்ப்பும் தான் கண்ணே நம் பிணைப்பை ஒன்றுபடுத்தியவை. உறுதிபடுத்தியவை.

எதிர்பார்த்த நிகழ்ச்சிதான் என்றாலும் எனது எதிர்காலத்தை எண்ணி வேலையில்லாமல் திண்டாடுவது, வேற்றூரிலே பசியும் பட்டினியும் அலைக் கழிக்க ஏங்கித் திரிவது என் எதிர்காலத்தை எண்ணி, மனத்திலே பெரும் புயல் வீசிக் கொண்டிருக்க மாலையிலே கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கொந்தளிக்கும் கடல் குமுறும் என் உள்ளத்தை நினைவூட்டியது. அசதியும் அலைச்சலும் என் கண்களைச் சுற்றியது. எவவளவு நேரம் கழிந்ததோ எனக்குத் தெரியாது.

ஐயா என்ற பெருங்கூச்சல் என்னைத் திடுக்கிட்டு எழச் செய்தது.நிலவின் மங்கிய ஒளியிலே சிறிது தொலைவில் கண்ட காட்சி என்னைப் பதறியடித்தது. ஒரு வயதான மனிதனை இரு முரடர்கள் கத்தியைக் காட்டிப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். மனிதனது உணர்ச்சிகள் அலையில்லாத கடல் போன்றது. அதில் இரக்கம் என்ற பெருங்காற்று வீசினால் வீரம் என்ற கொந்தளிப்பு ஏற்படுகிறது. என்னையும் அறியாமல் நான் அவர்களருகே ஒடினேன். நான் ஓடி வருவதைக் கண்ட முரடர்கள் கத்தியை என் மீது வீசி எறிந்தனர். நான் சிறிது ஒதுங்கிக் கொள்ளவே கத்தி கடலிலே விழுந்து மறைந்தது. உதவிக்கு ஆள் வந்ததைக் கண்டதும் அவர்களிடையே அகப்பட்ட மனிதனும் தன்னை விடுவித்துக் கொண்டான். கத்தியும் போய் களைப்பும் மேலிடவே அந்த முரடர்கள் ஓடிவிட்டனர்.

இதை மறந்துவிட்டேனே! அந்த வயோதிகர் மிகுந்த செல்வந்தர். நகரத்திலே பிரபல நகை வியாபாரி. தன் உயிரைக் காத்தவன் என்ற உணர்ச்சி மேலிட என்னைத்