பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி வாழ்க்கையின் கடிதம் 279

தன் மாளிகைக்கு அழைத்துப் போனதும் எனக்கு நிழற்படம் போலத் தோன்றுகிறது. காலையிலே என் கதையைக் கேட்டவர், வாழ்க்கைச் சூழலிலே சிக்கிச் சீரழிந்தவன் நான் என்ற அனுதாபமும், தன் உயிரைக் காத்தவன் என்ற நன்றி உணர்வும் உந்த, என்னைத் தம் கடையிலேயே நல்ல ஊதியத்தில் மேற்பார்வையாளன் வேலையிலமர்த்தினார்.

பிறகுதான் கண்ணே! நான் விடுமுறை பெற்று ஊர் வந்ததும். உன் தாயைக் கண்டு உன்னை எனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதும், அவர்கள் பின்னர் யோசித்து முடிவு கூறுகின்றேன் என்றதும். அப்போது தான் ஏதோ ஏமாற்றுக் குற்றத்துக்காக உன் தாய்மாமன் என்று உன் தாய் ஏங்கித்தவித்ததும், பிறகு உன்னுடைய எண்ணம் இலகுவாக நிறைவேறியதும். நாமிருவரும் மணப்பந்தலிலே ஒன்றுபட்டதும் என் அன்பே ஆருயிரே! இன்பம்! மறக்க முடியாதவை!

வாழ்க்கைத் தோணியை நாமிருவரும் மனமுவந்து நடத்தினோம். உல்லாச ஊஞ்சலிலே ஆடினோம். இன்பக் கடலிலே மூழ்கினோம். திருமணமான சில திங்களுக்குள் நமக்குப் பிரிவா? திருமணம் நடந்த சில மாதங்கள் கழித்து தம்பதிகளிடையே பிரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. மேலும் எழுத வெட்கம் திரைபோடுகிறது. தெளிவாகவே சொல்லுகிறேன் - எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்; என்ன? சிரிக்கிறாயா? என் சிங்காரச் சிலையே! என் எண்ணத்தை நிறைவேற்றுவாயா?

என்றுமுன்.......

(செப்டம்பர், 1959)