பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36. நிறை காக்கும் காப்பு

தவைத் திறந்து விட்டு அலட்சியமாக இரண்டு கைகளாலும் நிலைப் படியைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அந்தக் கிராமத்து அழகி. சொருக்குக் கொண்டை, உயரமும், பருமனுமாகத் திணித்துத் திணித்துப் பஞ்சு அடைத்த பட்டுத் தலையணைப்போல் வாளிப்பான உடம்பு. திமிர் தெரியும் அழகுக் கண்களில் ஏனென்று கேட்கிற துடுக்குப் பார்வை. அலட்சியம் தவழும் சிரிப்பை மறைக்காத இதழ்கள். கருங்கல்லில் செதுக்கிய சிற்பம் போல் எடுப்பான மூக்கு முழி, கொஞ்சம் அதிகமான அழகுதான்! தண்ணீரில் எண்ணெய் மாதிரி அந்தக் கிராமத்துத் திமிரோடு அழகு ஒட்டாமல் தெரிந்தது. செருக்கா? வீறாப்பா? கர்வமா? ஏதோ ஒன்று அழகுக்கு மீறி, அளவுக்கு மீறி அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்தது.

முத்தழகு இதை எதிர்பார்க்கவில்லை. கதவைத் தட்டினபோது இப்படி ஒரு 'பெண் புலி' வந்து திறந்துவிட்டு முறைத்துப் பார்க்கும் என்றும் அவன் நினைக்கவும் இல்லை.

“இதுதானே வீரப்ப மல்லுக்காரர் வீடு?” என்று கேட்டான் குறட்டில் ஏறித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே. அவன் சிவந்த பாதங்களில் கருப்பு நிறத் தோல் செருப்பு எடுப்பாகப் பொருந்தி இருந்தது. அந்தப் பெண் அவன் காலைப் பார்த்துச் சீறினாள்.”எந்திருச்சி வாசப் படிக்கிக் கீழே செருப்பைக் கழட்டிட்டு உட்காரு, ஐயா!”

“ஏனாம்? கழட்டாட்டி என்ன செய்வே?”

“ஐயாவுக்கு இந்த வீட்டு வளமுறை தெரியாது போலிருக்கு. ஐயா, பட்டணத்து இங்கிலீசுத் துரையோ! இது சிலம்ப வாத்தியாரு வீடு, வித்தை குடியிருக்கிற இடம். சரசுவதி பீடம்பாங்க. வாசற்படிக்கு அப்பாலே யாரையும் செருப்போடே விடறதில்லை இங்கே. இந்த ஊரிலே பச்சைப் பிள்ளையைக் கேட்டாக் கூடத் தெரியுமே இது?”

“அப்படியா? நான் பச்சைப் பிள்ளை இல்லே பாரு அதனாலேதான் எனக்குத் தெரியாமப் போச்சி. நீ போயி உங்க அப்பாவைக் கூப்பிடு. இப்படியே உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேசிட்டுப் போயிடறேன்.”

“கூப்பிடறது இருக்கட்டும்!. முதல்லே குறட்டுக்குக் கீழே இறங்கி வாசல்லே செருப்பைக் கழட்டிப் போடு ஐயா...!”

- “இது புதுச்செருப்பு. சோடி பன்னண்டரை ரூபா. அந்தச் சாக்கடைப் புழுதியிலே போட மாட்டேன். வேணும்னா இங்கேயே காலடியிலே கழட்டிப் போட்டுக்கறேன். நீ போய் அப்பாரைக் கூப்பிடு”