பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அடித்து நொறுக்குகிறவளாகத் தென்பட்டாளே ஒழிய, அடி வாங்கிக் கொண்டு நிற்கிறவளாகத் தெரியவில்லை.

நல்ல வேளை; சீற்றத்தோடும் சீற்றத்தைக் காட்டுவதற்குத் தயக்கத்தோடும் அவன் இப்படித் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் வீரப்பமல்லுக்காரரே உள்ளேயிருந்து வந்துவிட்டார்.

“என்னம்மா அது கூப்பாடு? யாரோடே வம்பு பண்ணிகிட்டு நிற்கிறே?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் வீரப்பமல்லுக்காரர்.

“யாரா? பட்டணத்து இங்கிலீசுத் துரை. இப்பத்தான் ஏரோப்ளேன்'லே வந்து குதிச்சாரு நீங்களே வந்து பார்த்துக்குங்க” என்று தந்தைக்கு உள்பக்கம் பதில் குரல் கொடுத்துக் கொண்டே அவனைப் பார்த்து முகத்தை ஒரு ‘வெட்டு வெட்டி அழகு காட்டிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள் அந்தப் பெண்புலி.

“போ,போ,இன்னிக்கில்லாவிட்டாலும் ஒருநாள் வகையாமாட்டிக்குவே” என்று சொற்களைத் தனக்குள் முணுமுணுத்துக் கறுவிக் கொண்டான் முத்தழகு.

"அடேடே பண்ணையார் வீட்டுத் தம்பியா? வாங்க சுகந்தானே? இப்ப லீவாக்கும் பட்டணத்திலிருந்து என்னிக்கு வந்தீங்க?"வீரப்பமல்லுக்காரர் விசாரித்துக் கொண்டே அவனுக்கு எதிர்த்தாற்போல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். மல்லுக்காரருக்கு மதுரை வீரசாமி கோடாலி முடிச்சு பன்னரிவாள் நுனி மாதிரி மீசை, காதுகளில் பெரிதாகச் சிவப்புக் கடுக்கன்கள். அந்த வயதிலும் கட்டுத் தளராமல் 'மல்லுக்காரர்' என்கிற வன்மையைக் காட்டும் உடம்பு.

“என்ன தம்பி? அதுகிட்ட ஏதாவது வாக்குடுத்திங்களா? கொஞ்சம் துடுக்கா எடுத்தெறிஞ்சு பேசியிருக்கும். அதுக்குச் சுபாவமே அப்படி, மனசிலே வச்சுக்கிடாதீங்க”

அவருடைய சமாதானம் இன்னும் வயிற்றெரிச்சலைக் கிளப்பியது அவனுக்கு அந்த நிலையில் அவரிடம் அதிகம் பேசிக் கொண்டிருப்பதற்கு நாணமும், பயமும் அடைந்தான் அவன். நேரடியாக வந்த விஷயத்தைத் தொடங்கினான். "அப்பா உங்களைப் பார்த்திட்டு வரச் சொன்னாங்க. 'வட்டி நிறையச் சுமந்து போச்சாம். அசலைத் தீர்க்காட்டாலும், வட்டியையாவது அப்பப்ப ‘பைசல்' செய்திட்டா நல்லாருக்கும்னாங்க”

“நான் மட்டும் வேண்டாமின்னா சும்மா இருக்கேன், ஏலாமைதான் காரணம். இந்த வருஷம் எனக்கு வெள்ளாமை ஒண்ணும் சுகமில்லை. சாவியும், பொக்குமா ஏமாத்திடிச்சு எப்படியாச்சும் பார்த்துக் கொடுத்திடணும்னு தான் இருக்கேன்.”

மல்லுக்காரர் குரலில் இரக்கம் கொடுத்துத் தணிந்து பேசினாலும் அந்தப் பணிவும், தாழ்வும், இரங்கிய குரலும் - செயற்கையாக இருந்தன. வம்சத்துக்கே பழக்கமில்லாதவை போல் தோன்றின. அவன் புறப்படுவதற்காக எழுந்துவிட்டான்.

"சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.வாரேன்.” எழுந்திருந்தவன், உங்க பொண்ணுக்குத் துணிச்சலும், துடுக்கும் ரொம்பத்தான் அதிகமாயிருக்கு கொஞ்சம்