பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நிறை காக்கும் காப்பு 283

அடக்கியே வையுங்க” என்று சொல்ல நிமிர்ந்தான். நிலைப்படியில் கையூன்றி மறுபடியும் அவள் வந்து நிற்பதைக் கண்டதும் அவன் வாயில் வார்த்தைகள் வரவில்லை. தனியாக அவமானப்பட்டது போதாதென்று மறுபடியும் அவருக்கு முன்னால் அவமானப்பட விரும்பவில்லை அவன். தான்.அவமானப்பட்ட விவரம் அவருக்குத் தெரியவிடுவதற்கும் அவன் தயாராயில்லை. சேற்றில் விழுந்திருந்த புதுச் செருப்புகளை எடுத்துக் கொள்ளாமலே வெறுங்காலோடு தெருவில் இறங்கி விறுவிறுவென நடந்தான்.நிலைப்படியில் நின்றிருந்த அவள் கலீரென்று சிரித்த சிரிப்பு அவன் செவிகளை எட்டி ஆண்மையைக் கொதிக்கச் செய்தது.அந்தச் சிரிப்பை ஒட்டி, “என்னம்மா சிரிப்பு வேண்டிக் கிடக்கு? கடன் வாங்கின லட்சணந்தான் சிரிப்பாச் சிரிக்குதே! நீ வேறே சிரிக்கணுமா?” என்று மல்லுக்காரர் மகளைக் கடிந்து கொண்ட குரலும் அவனுக்குக் கேட்டது.

ஒரு பெண் பிள்ளைக்கு இத்தனை திமிரா? ஒரு விநாடிநேரமாவது இந்தத் திமிரை அடக்கிப் பார்த்தாலல்லவா ஆண் பிள்ளை என்ற வார்த்தைக்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். 'நான் பொம்பளை!, என்னை விட்டுடுங்க' என்று கண்ணில் நீர் மல்க அவள் கெஞ்சிக் கொண்டு மண்டியிடும்படி ஒரு நிமிஷமாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திப் பார்த்துவிடவேண்டும் என்று கொதித்தது முத்தழகுவின் நெஞ்சம் பெரிய பஞ்சு மூட்டையில் ஒரு பொறி நெருப்பு விழுந்து சிதறின மாதிரி இந்த அவமானச் சம்பவம் அவன் மனத்துள்ளிருந்து விலகாமல் ஒரு மூலையில் கனிந்து கனன்று கொண்டேயிருந்தது.

அந்த முரட்டுப் பெண்ணின் தகப்பனார் தன் தந்தையிடம் பணத்துக்குக் கடன் பட்டிருந்ததுபோல் - தான் அவளிடம் துணிச்சலுக்குக் கடன் பட்டுக் கொண்டு வந்து விட்டது போல் அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாயிற்று. அதோடு அவளுக்குப் பட்ட துணிச்சல் கடனை வட்டியும், முதலுமாக, எவ்வாறாவது தீர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்று அவன் மனத்தில் ஒரு வைரம் ஏற்பட்டது.

2

விடுமுறையை நிம்மதியாகவும், இன்பமாகவும் கழிக்கலாமென்று கிராமத்துக்கு வந்த முத்தழகுவுக்குக் கிராமத்தில் கால் வைத்த முதல்நாளே இப்படிக்கடன் வசூலிக்கப் போன இடத்தில் ஒரு பெண் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டு அவமானப்பட நேரிடுமென்று தெரியாது. - . . . மறக்க முடியாமல் அதே நினைவில் கொதித்துக் கொண்டிருந்த மனத்தை அமைதிப்படுத்த இயலாமல் சாயங்காலம் மாந்தோப்புப் பக்கம் உலாவப் போனான் அவன். ஊரிலேயே பெரிய மாந்தோப்பு அது. அவர்களுடைய பண்ணைக்குச் சொந்தமானது. மரங்களடர்ந்து இருண்டு பசுமை செறிந்தது. தோட்டத்தின் நடுவில் நான்கு கமலை கட்டி நீர் இறைப்பதற்கு வசதியான பெரிய கிணறு.

கிணற்றைச் சுற்றிலும் பச்சரிசி மாங்காய் என்ற வகையைச் சேர்ந்த மாமரங்கள். உயர்ந்தரக 'பிஸ்கட்'டைச்சுவைத்துச் சாப்பிடுகிற மாதிரி அந்த மாங்காய்க்கு ஒரு தனி