பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ருசி உண்டு. முத்தழகு பச்சரிசிமாமரத்தடியில் போய் உட்கார்ந்தான். உட்கார்ந்தபடியே கைக் கெட்டுகிறாற் போலிருந்த ஒரு மாங்காயைப் பறித்துச் சுவைக்க ஆரம்பித்தான். கிளிகளின் மிழற்றுதல்,அணில்களின் கீச்சொலி, குயிலின் குரல், எல்லாமாகச் சேர்ந்து மாலை நேரத்தில் அந்தத் தோட்டத்துக்குத் தனி அழகு உண்டாக்கிக் கொண்டிருந்தன.

’சொத்'தென்று முத்தழகுவின் பிடரியில் ஒரு மாங்கொட்டை விழுந்தது."சே! சே! கிளியும், அணிலும், இந்தத் தோப்பிலே முக்கால்வாசி மாங்காயை வேட்டு வச்சிடுது” என்று முணுமுணுத்தவாறே பிடறியைத் தடவி விட்டுக் கொண்டான் அவன்.

மறுபடியும் நன்றாகக் கடிக்கப்பட்ட கொட்டை ஒன்று '‘ணங்' ’கென்று அவன் உச்சி மண்டையில் விழுந்தது."இதென்னவம்பு? இந்தத்தோப்பிலே கிளிகள் தொல்லை அதிகமாப் போச்சி” என்று எறிவதற்காகக் கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான் அவன்.

நிமிர்ந்தவன் அப்படியே திகைத்து நின்றான். மரக்கிளை மேல் கிளி இல்லை. வீரப்பமல்லுக்காரர் வீட்டுப் 'பெண் கிளி' படுஅட்டகாசமாக உட்கார்ந்து கால் நீட்டி மாங்காயைக் கடித்துக் கொண்டிருந்தது. ஒரு விநாடி மரக்கிளையில் அவள் ஒயிலாகவும், அநாயாசமாகவும் உட்கார்ந்திருந்த தோற்றத்தில் மனத்தைப் பறி கொடுத்துவிட்டு நின்றான் முத்தழகு. பட்டை உரித்த வாழைத்தண்டு மாதிரி முழங்கால்வரை தெரிய அவள் அமர்ந்திருந்த கோலம் அவனை என்னவோ செய்தது. ஆனால், மனித இயற்கையான இந்தச் சிறிய பலவீனமெல்லாம் ஒரே ஒரு விநாடிதான். அடுத்த விநாடியே அவள் தன்னை அவமானப்படுத்திய முரட்டுப் பெண் 'அவள் மேல் தன் கோபத்தை முழு அளவில் ஒன்று திரட்டிக் காட்ட வேண்டும்' என்ற உணர்ச்சிகளை மிக விரைவாக அடைந்தான் அவன்.முகத்தில் கடுமை பரவிப் பதிந்தது.

“கீழே இறங்கி வா, சொல்கிறேன் - இப்படிச் சர்வ சுதந்திரமாக ஏறி உட்கார்ந்து மாங்காய் பறித்துத் தின்பதற்கு இது உங்கள் அப்பன் வீட்டுத் தோப்பு என்ற எண்ணமோ? உள்ளே நுழைகிறபோதே காலை முறிக்க ஆளில்லாததனால் தானே இப்படித் துணிந்து, மாங்காய் திருட முடிகிறது?” என்று தோப்பே அதிரும்படி கூப்பாடு போட்டான் முத்தழகு.

அவனையோ, அவன் கூப்பாட்டையோ, இலட்சியமே செய்யாதவள்போல் மெல்ல மரத்திலிருந்து இறங்கினாள் அவள் பதற்றமோ, பயமோ சிறிது கூட இல்லை. உடைமைக்காரன் திருடும்போது பார்த்துவிட்டானே என்ற தடுமாற்றமாவது இருக்க வேண்டாமா? கிடையவே கிடையாது. அலட்சியப் புன்னகை. மறவர் குடிப் பெண்ணுக்கே இயல்பான வீறும் பீடும் கலந்த நடை 'நாணமும் வெட்கமும் நான் அறியமாட்டேன்’ என்பதுபோல் ஒரு திமிர்.இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக் கொண்டு அவனுக்கு முன்னால் வந்து நிமிர்ந்து நின்றாள் அவள். அவனுக்கு அழகு காட்டிக் கேலி செய்வது போலிருந்தது அவள் நின்ற விதம். அவனைப் பதிலுக்கு விளாச ஆரம்பித்தாள்; "ஐயா! ஆண் பிள்ளைச் சிங்கமே! எங்கள் அப்பன் வீட்டில் இப்படி ஒரு தோப்பு இருந்தால் இரண்டு மாங்காய்க்காக இப்படி மட்டு மரியாதை