பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி நிறை காக்கும் காப்பு * 285

இல்லாமல் பேசமாட்டோம். உங்கள் தோப்புக்கு வருகிறவர்களின் கால் ஒன்றும் முருங்கைக் குச்சி இல்லை, முறித்து விடுவதற்கு”

"சீ, வாயைப் பாரு. திருடித் தின்னிட்டுப் பேச்சு வேறே. மரியாதை தெரிஞ்சவள் நீ ஒருத்திதான் என்கிறதைக் காலையிலே உங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப நல்லாக் காட்டினியே!”

"கொஞ்சம் நாக்கை அளந்து பேசுங்க. பணத்துக்குத்தான் உங்ககிட்டக் கடன் பட்டிருக்கோம் மட்டு மரியாதை, மானம் இதுக்கெல்லாம் கடன் படலை”.

'அம்மா, பெண்புலியே! இந்தத் திமிர்ப் பேச்செல்லாம் உங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு பேசலாம். இங்கே பேசினால்.”

“பேசினால் என்ன செய்வீங்களாம்?”

அவன் கைகள் அவள் பிடரியை நோக்கிச் சினத்தோடு உயர்ந்தன.

“என்ன செய்வேனா? இதோ இப்படித்தான் செய்வேன்!” மனத்திலும் கைகளிலும் ஏற்பட்ட ஒரு வெறியில் தான் என்ன செய்கிறோம் என்பதையே சிந்திக்காமல் அவளைத் தள்ளிவிட்டான் முத்தழகு. பின்புறம் நீர் நிரம்பிக் கிடந்த கிணற்றில் விழுந்தாள் அவள். ஏதோ அசட்டுத் துணிச்சலில் அதைச் செய்துவிட்டாலும் அவன் உடம்பு பயத்தால் நடுங்கியது. நீரில் அவள் விழுந்ததால் எழுந்த ஒசையைக் கேட்டபோது அவனுக்குத் திகில் பிடித்தது. நீந்தத் தெரியுமோ, தெரியாதோ - தான் குருட்டுத்தனமாகப் பிடித்துத் தள்ளிவிட்டதன் விளைவு என்ன ஆகுமோ?’ என்று நிதானமாக நினைத்துப் பார்த்தபோது தான் முரட்டுத்தனமாக ஏதோ பெரிய தப்புக் காரியம் செய்து விட்டதை உணர்ந்தான்.

எப்படியாவது தன்னைத்தப்பிக்கச்செய்துகொண்டு ஓடிவிட்டால் போதுமென்ற ஒரு கோழைத்தனமான முடிவு அப்போது அவன் மனத்தில் தோன்றியது. திரும்பிப் பாராமல், ஒட்டமும் நடையுமாக வீட்டுக்கு விரைந்தான் முத்தழகு, உள்ளங்காலில் முறிந்து நின்று வெளிவராத முள்ளைப்போல் அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டு வந்த குற்ற நினைவு மட்டும் மனத்தில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. அவன் மனமும் உடம்பும் ஒரு நிலை கொள்ளவில்லை. முகத்தில் வேர்த்துக் கொட்டியது. அதற்கேற்றாற்போல், “என்னடா முத்து? எங்கேயிருந்து இப்படி வேர்க்க விறுவிறுக்க ஒடி வருகிறாய்? முகத்தைப் பார்த்தால் என்னவோ கொலை பண்ணிவிட்டு ஒடி வருகிறவன் மாதிரி இருக்கிறதே?” என்று வீட்டுக்குறட்டில் உட்கார்ந்து வட்டிக் கணக்குப் பேரேட்டைப் பார்த்துக் கொண்டிருந்த தகப்பனார் வேறு அவனைக் கேட்டுவிட்டார். பதறிப் போனான் அவன்.

"ஒண்னுமில்லேப்பா, தோப்பிலேயிருந்து வரேன்” என்று அப்பாவுக்குப் பதில் சொல்லிவிட்டு உள் வீட்டுக்குள் போய் ஒரு இருண்ட மூலையில் ஈஸிசேரைப் போட்டுக் கொண்டு சாய்ந்தான். அவனுடைய மனக்கண்களுக்கு முன்னால் பயங்கரமான கற்பனை நிழல்கள் ஆடின.