பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வீரப்பமல்லுக்காரரும், அவரிடம் சிலம்பம் படித்த சீடப் பிள்ளைகளும் கத்தியும், வெட்டரிவாளும், பாலாக்கம்பும் தூக்கிக் கொண்டு, கலகக்காரர்களைப்போல் அவன் வீட்டை நோக்கித் 'திமுதிமு’வென்று ஓடி வருகிறார்கள். “ஒரு கன்னிப் பெண்ணைத் தொட்டுப் பிடித்துக் கிணற்றிலே தள்ளுவதாவது? வெளியே இழுத்துக்கொண்டு வா, அந்தப் படித்த நாய்ப் பயலை. பெண் பிள்ளையைத் தொட்ட கையை முறித்துப் போட்டு விடுகிறேன்” என்று வீரப்ப மல்லுக்காரர் உறுமுகிறார். ஊரே அவரோடு ஒன்று சேர்ந்து கொண்டு நியாயம் கேட்டு அவன் வீட்டுக்கு முன் வந்து கூடிக் கொதித்து நிற்கிறது.

இருட்டில் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு இப்படி நடக்குமோ என்று நினைக்கும்போதே கொலைக்களத்தில் கொண்டு போய் நிறுத்தினதுபோல் அவன் உடம்பு வெடவெடத்தது.எதையோ பெரிதாக இழக்கப் போகிற மாதிரி நெஞ்சு படக் படக் கென்று அடித்துக் கொண்டது.

பிடித்துத் தள்ளியதில் இசைவு பிசகாகக் கிணற்றுச் சுவரிலாவது பாறையிலாவது மோதி அடிபட்டிருக்குமோ? அல்லது தண்ணீரைக் குடித்து, முங்கி, முங்கி இறந்து மிதந்துவிட்டாளோ?

அந்தப் பெண் நீரில் நிலைகுலைந்து வீழ்வதுபோலவும் முங்கியும், மேலெழுந்தும், தண்ணீரைக் குடித்து மரண அவஸ்தைப்படுவது போலவும் அவன் கண்கள் முன் காட்சிகள் விரிந்தன.

வெகுநேரம் அசையாமல் இருளில் கண்ணை மூடியவாறு ஈஸிசேரில் கிடந்தான் அவன். உடம்பு நெருப்பாய்ச் சுட்டது. கண்கள் கபகபவென்று எரிச்சல் எடுத்தன. தலையை வலித்தது. ஜன்னி கண்டமாதிரி ஒரு நடுக்கமும், குதுகுதுப்பும் ஏற்பட்டிருந்தன.

'நீ கொலை செய்துவிட்டாய்! அநியாயமாக ஒரு பெண்ணைக் கைகூசாமல் அத்தனை உயரத்திலிருந்து கிணற்றில் பிடித்துத் தள்ளலாமா? பாவி பாதகா என்று அவன் மனமே அவனை இடித்துக் காட்டுவது போலிருந்தது. ஈஸிசேரில் உடம்பு துக்கித் துக்கிப் போட்டது.

“அட பாவி உடம்பு ஏண்டா இந்தக் கொதி கொதிக்குது? ஏண்டா இப்படிப் பிசாசு அறைப்பட்டவன் மாதிரி முழிக்கிறே? என்னடா உனக்கு? தோப்புக்குப் போனேன்னியே ஏதாவது பயந்துக்கிட்டியா?" என்று அவனுடைய அப்பா வந்து பார்த்துவிட்டுத் தடபுடல் படுத்தினார். கொளுமோர் காய்ச்சிக் கொடுக்கச் சொன்னார். உடம்பைத் தொட்டுப் பார்த்துவிட்டு, 'ஜன்னி கண்டவன் மாதிரி உதறுதேடா?” என்றார்.

"தோப்புலே கமலைக் கிணற்றண்டே போனியா? அங்கே தான் பண்ணைக்காரச்செங்கான் நாந்துக்கிட்டுச் செத்தான்!” என்று தாமாகவே வேறு காரணம் கற்பித்துக்கொண்டு பதறினார் அவனுடைய தந்தை.