பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நிறை காக்கும் காப்பு 287

இரவு முழுவதும் முத்தழகுக்கு உறக்கம் வரவில்லை. 'நாளைக்கு விடிந்தால் ஊருக்கெல்லாம் தெரிந்துவிடும். அத்தனை பேரும் அந்தக் கிணற்றுக்குத்தானே குளிக்கப் போவார்கள்? காலையில் முதல் முதலாகக் குளிக்கப்போகிறவன் அவள் மிதப்பதைப் பார்ப்பான்.அலறிப்புடைத்துக் கொண்டு ஒடி மல்லுக்காரரிடம் போய்ச் சொல்லுவான்.

அப்புறம்? அப்புறமென்ன? சந்தி சிரிக்க வேண்டியதுதான். விடிகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணி நாலரை. இன்னும் சிறிது நேரத்தில் வீடு கலகலவென்று வழிப்புப் பெற்றுவிடும். தெருவில் வாசல் தெளிக்கிறவர்கள், குளிக்கப் போகிறவர்கள், வயல்,வரப்பு என்று உழவு வேலையாகப் போகிறவர்கள்-எல்லோரும் நடமாடித் தெருவை கலகலப்பாக்கி விடுவார்கள். ஊர் விழிக்குமுன் எங்கேயாவது ஒடிப் போய்விட்டால் என்ன? ஐந்தே கால் மணிக்கு வடக்கே போகிற ரயில் ஒன்று இருக்கிறது.

முத்தழகு போர்வையை உதறித் தள்ளிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தான். அவன் மனம் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒசைப்படாமல் பெட்டியைத் திறந்து கைக்குத் தோன்றிய அளவு பணத்தை எடுத்துச் சட்டைப் பையில் திணித்துக் கொண்டான். கூடத்தில் அவன் தந்தை தூங்கிக் கொண்டிருந்தார். மெல்ல நடந்து அவரைக் கடந்து வாசற் கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினான். மேல் துண்டைத் தலையில் போட்டு மறைத்துக் கொண்டு நடந்தான்.

ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற போக்கில் இன்னொரு சந்தேகத்தையும் தீர்த்துக்கொண்டு போய்விட்டால் நல்லதென்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய சந்தேகப்படி நடந்திருக்கும் பட்சத்தில் சமீபகாலத்தில் ஊர் திரும்ப வேண்டிய அவசியமே அவனுக்கு இருக்காது. எங்கேயாவது ஒடித் தலைமறைவாக இருந்துவிட வேண்டியதுதான்.

அவ்வளவு உயரத்திலிருந்து முரட்டுத்தனமாக அவன் கிணற்றுக்குள் அவளைத் தள்ளியதற்கு நீச்சுத் தெரியாதவளாயிருந்தால் இதற்குள் இறந்து போய்ப் பிணமாக மிதந்து கொண்டிருப்பாள். நீச்சுத் தெரிந்தவளாக இருந்தாலும் தானாக கிணற்றில் குதித்தால் அடிபடாது. விளிம்புச் சுவரோரத்திலிருந்து இன்னொருவர் பிடித்துத் தள்ளினதால் எங்கேயாவது அடிபடாமல் போகாது.

இரண்டில் எது நடந்திருந்தாலும் முத்தழகு குற்றவாளிதான்.இறந்துபோய் அந்தப் பெண் மிதந்து கொண்டிருந்தால் கொலைகாரன் என்று சொல்லுகிற அளவுக்குப் பெரிய குற்றவாளி அவன். மறுபடியும் ஊருக்குத் திரும்பியார் முகத்திலும் விழிக்கவே முடியாத அளவுக்குப் பெருங்குற்றம் அது. அடிபட்டுக் காயமடைந்திருந்தால் சிறிது காலத்தில் மறந்து மறைந்து போகிற சாதாரணக் குற்றம்தான்.

ஸ்டேஷனுக்குப் போகிற வழியில்தான் அந்த மாந்தோப்பு இருந்தது. போகிற போக்கில் ஒரு நடை உள்ளே நுழைந்து பார்த்துவிட்டுப் போய்விட்டால் இரண்டில் எது நடந்திருக்கிறதென்று சந்தேகமறத் தெரிந்துவிடும். கிணற்றில் ஒன்றும்