பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மிதப்பதாகத் தெரியாவிட்டால் கவலைக்கிடமாக எதுவும் நடக்கவில்லை என்று சற்றே திருப்தியோடு இரயில் ஏறலாம் என்று எண்ணினான் அவன்.

மாந்தோப்புக்குள் நுழைந்தான் முத்தழகு, இருள் பிரிந்து ஒளி புலர்ந்தும் புலராமலும் இருக்கிற மங்கல நேரம் தோப்பு முழுதும் காடு"போல் "கீச்'சென்று தனிமையில் மூழ்கிக் கிடந்தது. நடந்து உள்ளே போவதற்கே பயமாக இருந்தது. கமலைக் கிணற்றடியில் பண்ணைக்காரன் செங்கான் நாந்து கொண்டு செத்த விஷயம் வேறு இந்தச் சமயம் பார்த்து நினைவுக்கு வரவா வேண்டும்? மருளும் மனமும், மிரண்ட கண்களும், தயங்கிய நடையுமாக அவன் கிணற்றடிக்குச் சென்று நின்றான். பயத்தினாலும், பதற்றத்தினாலும் வேகமாக அடித்துக்கொள்ளும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மெல்லக் குனிந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான்.

"அப்பாடா! கிணற்றில் எதுவும் மிதக்கவில்லை. நிம்மதியாக மூச்சு வந்தது முத்தழகுக்கு. ஆனாலும் ரயிலேறி ஒடிப் போய்விட வேண்டுமென்ற அவசரமும், பரபரப்பும் மட்டும் தணியவே இல்லை.

"செத்து மிதந்தால்தான் குற்றமா? சுவரிலோ, பாறையிலோ மோதிக் காயம் பட்டால்தான் குற்றமா? திருமணமாகாத பெண்ணைத் தனியாக இருக்கும்போது ஒரு ஆண்பிள்ளை தொட்டுக் கிணற்றில் தள்ளினதே பெருங்குற்றந்தானே? அவள் ஆயிரம் குற்றங்கள் செய்து என்னை ஏளனமாகப் பேசியிருக்கலாம். அவமானப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதை யாரும் குற்றமாக ஒப்பமாட்டார்களே! நான் செய்தது தானே குற்றமாகத் தோன்றும்? என்னுடைய அப்பா பெரிய பண்ணையார்! ஊரிலேயே அதிகமாகச் செல்வமுள்ளவர். ஆனாலும் இந்தப் பாழாய்ப் போன கிராமத்தில் பணத்தைவிட நியாயத்துக்குத்தானே அதிக மதிப்பு?:”

கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ரேடியம் டயல் நீல ஒளியை உமிழ்ந்தது. மணி ஐந்து அடித்து ஐந்து நிமிஷம் ஆகியிருந்தது. ‘ரயிலுக்கு இன்னும் பத்தே நிமிஷம்தான் இருக்கிறது. புறப்பட்டுவிட வேண்டியதுதான் என்று கிணற்றடியிலிருந்து திரும்பினவன் தனக்குப் பின்னால் கிணற்று மேட்டில் நின்று கொண்டிருந்த உருவத்தைப் பார்த்தவுடன் பேயறை வாங்கினவன் போல் திகைத்துத் திடுக்கிட்டு நின்றான். அவன் உடம்பு பதறிப் பயந்து நடுங்கியது.

கைகளை இடுப்பில் ஊன்றிய வீறாப்புடன் அன்று மாலை அவன் கிணற்றில் தள்ளுமுன் நின்றாளே அதே கம்பீரத் தோற்றத்தில் வீரப்பமல்லுக்காரர் மகள் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

இப்போது அவளுடைய வலதுகையில் பளபளவென்று மின்னும் வெட்டரிவாள் ஒன்றும் இருந்தது. கோபம் உள்ளடங்கிய கள்ளச் சிரிப்பு அவள் முகத்திலும், இதழ்களிலும் தெரிந்தது. வெறியுடன் பழிவாங்க வந்து நிற்பவள்போல் நின்றாள் அவள் வந்து நிற்பது, அவளாஅவளுடைய ஆவியா என்றுகூடச் சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு .

பண்ணையார் வீட்டுப்பிள்ளைகளெல்லாம் இவ்வளவு சீக்கிரமாக எழுந்திரிச்சிக் குளிக்க வரலாமா? பன்னிரண்டு நாழிகை வரை தூங்கிட்டுக் கிடக்க வேண்டாமா?”