பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி நிறை காக்கும் காப்பு * 289

அவள்தான் குத்தலாகக் கேட்டுக் கொண்டே அவனை நோக்கி நடந்து வந்தாள். விளையாட்டாகச் சுழற்றுவதுபோல் வெட்டரிவாளை வலது கையில் சுழற்றிக் கொண்டே வந்தாள்.

ஒடிந்து விழுகிறாற்போல் சோனிப் பயலாக உடல் வன்மையும், மனத்திடமும் குறைந்து கோழையாய் நிற்கும் தன்னை அவளோடு ஒப்பிட முயன்றான் முத்தழகு, முடியவில்லை. எட்டு வாலிபர்களைச் சிலம்பக் கழியால் அடித்துப் போடுகிற உடல் பலமும் மனப்பலமும் இருக்க முடியும் அவளுக்கு அவளெங்கே? தான் எங்கே? சூறைக் காற்றில் ஆடுகிற சோளத்தட்டைக் குச்சி மாதிரி அவன் உடம்பு வெடவெடத்தது. தன்னால் கிணற்றில் பிடித்துத் தள்ளப்படும்போது நேற்று அவள் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாளோ, அதே இடத்தில் இன்று தான் நின்று கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

அவள் தன்னைப் பதிலுக்குப் பதில் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டால் தனக்கு நீந்தக்கூடத் தெரியாதென்பதை நினைத்துக் கொண்டான். அவள் கையில் இருக்கிற வெட்டரிவாளைக் கண்டு குலைநடுங்கினான் அவன்.

'குதிகால் பிடரியில்பட ஒரே ஒட்டமாக ஓடிவிடலாமா? என்று தோன்றியது. அப்படி ஒடுவதற்கும் வழி இல்லை. பின்னால் கிணறு, முன்னால் அரிவாளோடு அந்தப் பெண் புலி. நாக் குழறித் தடுமாற்றத்தோடு அவளிடம் பேச ஆரம்பித்தான்.

‘நேற்று நான் வேணுமின்னு அப்படிச் செய்யலை ஏதோ கை தவறி. தெரியாமே. உங்க அப்பா கிட்டச் சொல்லிடாதே. என்னை மன்னிச்சிடு.”

அவன் உளறியதைக் கேட்டு அவள் கலீரென்று சிரித்தாள்."ஏன் இப்படி நடுங்கி உதறுது உங்க உடம்பு? ஏதோ பிசாசைக் கண்ட மாதிரி கண்வெள்ளை விழி தெரியுதே! நீங்க என்னா சொல்லுறீங்க? உங்களை எதுக்கு நான் மன்னிக்கணும்?” என்றாள் பாதாதிகேச பரியந்தம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே

அவள் வஞ்சகமாக ஒன்றும் தெரியாததுபோல் நடிக்கிறாளோ என்று தோன்றியது அவனுக்கு. சிறிது துணிவை வரவழைத்துக்கொண்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். இப்போதும் அந்த முகத்தில் அலட்சிய பாவமும் சிரிப்பும்தான் தெரிந்தன. வஞ்சகத்தின் சாயல் சிறிதுகூட இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மறுபடியும் மன்னிப்புக் குழைகிற தொனியில், "நேற்று நீ என்னிடம் அதிகமாக வரப்பு மீறிப் பேசிட்டே, கோபத்திலே என்ன செய்கிறோம்னு தெரியாமே உன்னை நான் கிணற்றிலே பிடிச்சுத் தள்ளிட்டேன்; உனக்கு எங்கேயாவது அடிகிடி பட்டிருக்குமோன்னு இராத்திரி முழுவதும் உறங்கலை நான்." என்று ஆரம்பித்தான்.

இதைக் கேட்டு அந்தத் தோப்பே அதிரும்படி இரைந்து சிரித்தாள் அவள். ஏதோ மாபெரும் வேடிக்கையைக் கேட்டுவிட்டவள்போல் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள். அவனுடைய பயந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க மறுபடியும் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு.

நா.பா. 1 - 19