பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“அவள் ஏன் இப்படிச் சிரிக்கிறாள்? என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் எப்படியும் பழி வாங்கியே தீருவதென்று உறுதி செய்து கொண்டுதான் இப்படிச் சிரிக்கிறாளோ?' என்றெண்ணி அவன் மேலும் நடுங்கினான். கேட்பதற்குப் பயந்து கொண்டே, “நீ ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?" என்று கேட்டும் வைத்தான்.

"நீங்க என்னை எப்போது கிணற்றில் தள்ளினீங்க? ஏதாவது சொப்பனம் கண்டீர்களா? நான் குளிச்சிட்டுப் போகத்தான் நேற்று இங்கே வந்திருந்தேன். எனக்கு நல்லா நீச்சுத் தெரியும் கிணற்றங்கரை மேலே இந்தப் பச்சரிசி மாமரத்திலே ஏறி அங்கிருந்து தண்ணிலே குதிச்சு நீந்துவேன். அதுக்காகத்தான் மரத்துமேலே ஏறினேன். குதிக்கறத்துக்கு முன்னாலே ஒண்ணு ரெண்டு மாங்காயை ருசி பார்த்தேன். நீங்க வந்தீங்க. ஏதோ சத்தம் போட்டீங்க கீழே இறங்கி வந்து நானும் பதிலுக்குச் சத்தம் போட்டேன்! உடனே இந்தத் திமிர்ப் பேச்செல்லாம் பேசினால் உன்னைச் சும்மா விடமாட்டேன் அப்படீன்னிங்க. 'என்ன செய்வீங்களாம்?’ என்று பதிலுக்குக் கேட்டேன். 'இதோ என்ன செய்கிறேன் பாரு' என்று கையை ஓங்கிட்டுத் தொட வந்தீங்க, நீங்க எங்கே தொட்டிடுவீங்களோ என்கிற கூச்சத்திலே நானே தண்ணீரிலே குதிச்சுட்டேன். கிணத்திலே நல்லாத் துளைஞ்சு நீச்சலடிச்சுக் குளிச்சிட்டுக் கரையேறி வந்து பார்த்தேன். உங்களைக் காணலே. இதோ இந்தக் கைக்குட்டையை இங்கே போட்டுட்டுப் போயிட்டீங்க. அவனிடம் நீட்டினாள்.

அவள் சொன்ன பதிலைக் கேட்டு அவன் மலைத்துப் போய் நின்றான். அவள் கிணற்றில் குதித்த அதிர்ச்சியில் தானே பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டதாகப் பரபரப்படைந்து பதறி ஒடியிருக்க வேண்டுமென்று அப்போது தான் அவனுக்குத் தோன்றியது. தன்னுடைய வடிகட்டின கோழைத்தனத்தை எண்ணித் தானே வெட்கப்பட்டுக் கொண்டான் முத்தழகு அவள் கூறியவற்றைக் கேட்டபின் அவனுக்கு அவளிடமிருந்த பயமெல்லாம் போய்விட்டது. முதல் நாள் அவளுடைய வீட்டில் பட்ட சிறு அவமானம் கூட மறந்துவிட்டது.

அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டோமென்று வீண் பிரமையினால் விடிய விடியத் தான் பட்ட பயத்தையும் ஊரைவிட்டே ஓடிவிடலாமென்று இருளோடு ரயிலுக்குப் புறப்பட்டதையும் சிரித்துக்கொண்டு அவளிடம் சொல்லிவிட்டான் முத்தழகு. எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவளும் சிரித்தாள். "நீங்க சொல்கிறதைக் கேட்டா என்னைப் புலி, சிங்கம்னு நினைச்சு அரண்ட மாதிரியில்லே தோணுது?”

"சும்மாவா பின்னே? செருப்பைத் தூக்கி எறிஞ்சிட்டு முறைச்சே பாரு அதிலிருந்து எனக்குப் பயந்தான் உங்கிட்டே

"வேணும்முன்னா தூக்கி எறிஞ்சேன் வாசல்லே கழட்டிட்டு வாங்கன்னு எங்க வீட்டு வளமொறையைச் சொன்னேன். நீங்க கேக்க மாட்டேன்னீங்க, தூக்கி எறிஞ்சேன். வாயைக் கொடுத்தால் நானும் பதிலுக்குப் பதில் பேசிடுவேன். மத்தபடி நான் ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி முரட்டுப் பொண்ணு இல்லை!” - இதைச் சொல்லும்போது நாணத்தினால் சற்றே முகம் சிவக்கத் தலை குனிந்தாள் வீரப்பமல்லுக்காரர் மகள்.