பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நிறை காக்கும் காப்பு * 291

“முதல்லே அந்த வெட்டரிவாளைக் கீழே போடு. உன்னை அதோட சேர்த்துப் பார்க்கறப்பப் பயமாயிருக்குது. நேற்று இரவு பூராவும் பயந்தது போதும்” என்றான் முத்தழகு,

"இராத்திரி பூரா ஏன் நீங்க பயந்தீங்களாம்?”

"ஏனா? கலியாணமாகாத உன்னை நான் தொட்டுப் பிடித்துக் கிணற்றிலே தள்ளிவிட்டேன்னு நீ உங்கப்பாகிட்டேச் சொல்லிட்டா, அவர் ஊரெல்லாம் திரட்டிக்கிட்டு அரிவாளும், கம்புமா எங்க வீட்டு வாசல்லே வந்து நிக்கப் போகிறாரேன்னுதான்.”

"அப்படி நினைச்சுப் பயந்தது நிசந்தானே?”

“நிசந்தான். ஏன் இப்படிக் கேட்கிறே?”

“இல்லே; எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு எப்பவும் பெண்ணுங்கிறவள் நெருப்பு மாதிரி சூடுதான் நெருப்பை நெருங்கவிடாத குணம். பெண்ணுக்கு நிறைன்னு ஒன்று இருக்கு. அந்த நெறை அவளுக்குக் காப்பு. அந்த நிறைதான் ஆம்பளையை அவளிடம் நெருங்கவிடாமக் காக்குது. ஆம்பளை இந்த நிறைக்கு அருகில் வரத்தான் பயப்படுகிறான். ஒரே ஒருத்தன்தான் நிறையை மீறணும். அவன்தான் புருஷன்' - அப்பிடிம்பாரு”

"அப்போ நீ உன்னை நெருப்புன்னு சொல்றே?” என்று சிரித்துக்கொண்டே அருகில் நெருங்கி அவள் தோளைத் தொட்டான் முத்தழகு, அவள் அசையவில்லை.

“நெருப்புச் சுடவில்லையே?”

“உங்களைச் சுடாது.”

“ஏனோ?”

அவள் தலைகுனிந்தாள். அவன் முகம் மலர்ந்தது. “நான் வரேன், வேலிக்கு முள் வெட்டிட்டுப் போகணும். அதான்.அதிகாலையிலே எழுந்திரிச்சிப் புறப்பட்டேன்.” என்று நகர்ந்தாள் அவள்.

‘போயிட்டு வா! இனிமேல் தினம் உங்க வீட்டுப் பக்கம் வட்டி கேட்க வருவேன்.”

“வாருங்க.. ஆனால் செருப்புப் பத்திரம்” சிலேடையாகப் பதில் சொன்னாள் அவள்.

இரண்டு பேருடைய சிரிப்பொலி அமர்க்களமாகக் காற்றில் மலர்ந்தது.

'இந்த முரட்டுப் பெண்ணுக்குள் இத்தனை மென்மையான இதயம் இருக்கிறதா? என்று வியந்து கொண்டே அவள் கொடுத்த கைக்குட்டையைச் சட்டைப் பைக்குள் வைக்கும்போது அவன் மனம் முழுமையாக நிறைந்தது. விரைவில் அந்த நிறைவைத் - தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினான் அவன்.

(கல்கி, தீபாவளி மலர், 1959)