பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37. நெருப்புக் கோழி

ப்போதுதான் முதல் முதலாக நான் காட்டிலாகாவில் பாரஸ்ட் ரேஞ்சர் உத்தியோகத்தை அடைந்திருந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே முன்பின் பழக்கமில்லாத ஏதோ ஒரு மலையாளப் பகுதியில் என்னை ரேஞ்சராக நியமித்திருந்தார்கள். தெரிந்த நண்பர் ஒருவர் நான் நியமனம் பெற்றிருந்த பகுதியிலுள்ள ஓர் ரப்பர் எஸ்டேட் மேஸ்திரிக்கு என்னை அறிமுகப்படுத்திக் கடிதம் கொடுத்திருந்தார். என்னுடைய ரேஞ்சில் போய் வேலையை ஏற்றுக் கொண்டதும், அந்த மேஸ்திரி குஞ்சுப் பணிக்கரிடம் கடிதத்தைக் கொடுத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான் இருந்து கொள்ள ஓர் அறை பார்த்துத் தரும் வேலையை அவனிடம் ஒப்படைத்தேன். இரண்டு மூன்று நாள் கழித்துப் பணிக்கர் எனக்கு ‘ரூம்’ பார்த்திருந்த வீட்டைக் காண்பிப்பதற்காக என்னை அழைத்துக் கொண்டு போனான்.

மலைச் சரிவிலுள்ள பயங்கரமான தனிமைக்குள் பிடிபட்டுக் கிடப்பது போல் வெறிச்சோடிப் போய்த் தோற்றமளித்தது அந்த வீடு. 'மூலங்கோட்டு மனைப் பட்டாத்திரிநம்பூதிரிகள்’ என்று அந்த வீட்டுக்காரரின் பெயரைக் கூறினான் பணிக்கர். அவருக்குத் தொழில் மாந்திரிகமாம்.

வீட்டுக் கூடத்தில் நம்பூதிரி உட்கார்ந்திருந்தார். வைதிகக் கோலத்தில் பரிசுத்தமாக இருந்தார். ஒல்லியான தேகம். நல்ல உயரம். எலுமிச்சம் பழ நிறம். முன் நெற்றியில் உருண்டையாகச் சிறியதாக முடிந்து தொங்கும் முன் குடுமி. நெற்றியில் வரிவரியாகச் சந்தனக் கீற்றுகள். அதன் நடுவே குங்குமப் பொட்டு. அவரைச் சுற்றி ஐந்தாறு தாமிரத் தகடுகள் பெரிது பெரிதாக இறைந்து கிடந்தன. அவற்றில் சக்கரங்களும் எழுத்துக்களும் செதுக்கியிருக்கின்றன. இன்னொரு பக்கம் வெள்ளிப் பூண் பிடித்த பிரம்புகள் இரண்டு கிடந்தன. நானும் குஞ்சுப் பணிக்கரும் உள்ளே நுழைந்த போது கூட அவர் ஒரு தாமிரத் தகட்டில் இரும்பு ஆணியால் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

“தம்பிரான்,இவர்தாம் புதிதாக வந்திருக்கிற பாரஸ்ட் ரேஞ்சர். உங்கள் வீட்டு முன் அறையை இவருக்கு வாடகைக்கு விடலாம் அல்லவா?” என்று அறிமுகம் செய்து விட்டுக் காரியத்தைச் சொன்னான் பணிக்கர். நம்பூதிரி எங்களை நிமிர்த்து ஏறிட்டுப் பார்த்தார்.

“வாடகைக்கு விடுவதைப் பற்றி ஆட்சேபம் இல்லை. அறையைத் திறந்து காண்பிக்கிறேன். அவருக்குப் பிடித்தால் இருந்து கொள்ளட்டும்” என்று சொல்லி விட்டு, உள் பக்கமாகத் திருப்பி, “தினகர், அத்த வாயிற்புறத்து அறையின் சாவியை எடுத்துக் கொண்டு வா, அம்மா” என்று குரல் கொடுத்தார்.