பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நெருப்புக் கோழி 293

மலையாளத்துப் பெண்மை வனப்பெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகி வந்ததுபோல் ஒர் இளம்பெண் சாவிக்கொத்துடனே வந்தாள். “நம்பூதிரியின் பெண்” என்று என் காதருகே மெல்ல சொன்னான் பணிக்கர். ஒரே ஒரு கணந்தான் பரிபூரணமான அந்த அழகைப் பார்க்க முடிந்தது. சாவிக் கொத்தை நம்பூதிரியிடம் கொடுத்துவிட்டு அவள் மறுபடியும் சமையற்கட்டுக்குள் மறைந்துவிட்டாள்.

நம்பூதிரி என்னையும் குஞ்சுப் பணிக்கரையும் அழைத்துக்கொண்டுபோய் வாயிற் பக்கத்து அறையைத் திறந்து காட்டினார். ஆள் பழக்கமில்லாத அறை தூசி படிந்து ஒட்டடை மலிந்து சுத்தமின்றி இருந்தது.

“இந்த அறைக்கு இதுதான் ஒரே ஜன்னல்” என்று சொல்லிக் கொண்டே மேற்குப் பக்கமாக இருந்த ஜன்னலின் கதவுகளைத் திறந்துவிட்டார் நம்பூதிரி.

ஜன்னலைத் திறந்ததும் பேய்க் காற்றுப்போல் காற்று உள்ளே வீசியது. திறந்த ஜன்னல் கதவுகளின் வழியே மேகம் மூடிய நீலமலைச் சிகரங்கள் அழகாகத் தெரிந்தன.

அலமாரியிலிருந்த புத்தகங்களும் சாமான்களும் அப்படியேதான் இருக்கும். நாளைக்கு அறையைச் சுத்தம் செய்து கொடுத்துவிடுகிறேன். மாதம் ஐந்து ரூபாய் வாடகை, உள்ளே விறகு அடுப்பு உபயோகித்துச் சமையல் செய்யக்கூடாது. அவசியமானால் கரியடுப்போ ஸ்டவ்வோ உபயோகித்துக் கொள்ளலாம்” என்று நிபந்தனைகளை அடுக்கினார் நம்பூதிரி.

அவருடைய விருப்பப்படியே இரண்டு மாத வாடகையை முன் பணமாகக் கொடுத்துவிட்டு மறுநாள் காலையில் சாமான்களோடு வந்துவிடுவதாகச் சொல்லிய பின் நானும் பணிக்கரும் விடைபெற்றோம்.

அப்போது இருள் சூழும் நேரம், கருநீலப் பசுமையாய் ஓங்கிக் ககனவெளியோடு உறவு கொண்டாடுவதுபோல் நிமிர்ந்த மேற்கு மலைத் தொடரின் அழகை அனுபவித்துக் கொண்டே பணிக்கரோடு நடந்தேன். இடைவெளியின்றி மிடைந்த பசுமையான மரக்கூட்டம், கலகலக்கும் சிற்றருவிகள், வானத்தினின்று நழுவி நீலச்சல்லாத் துணிகள் போல் மலைச் சிகரங்களில் மேகச்சாரல்கள் இறங்கும் அழகு! கூடு அடையும் பறவைகளின் குரல் பேதங்கள், எங்கோ தொலை தூரத்தில் மிளாமான்களும், யானைகளும் இருப்பதற்கு அடையாளமான ஒசைகள்; அடடா! அந்த மலைச்சிகரங்களில் பல அழகுகள் கொள்ளை கொள்ளையாக மலிந்து காட்சியளித்தன. மலைச் சரிவில் இறங்கித் தென்மேற்குப் பக்கமாகத் தேக்குமரக் கூட்டங்களில் புகுந்து சிறிது தொலைவு நடந்தால் பாரஸ்ட்ரேஞ்சு ஆபீஸ்: அதாவது என் அலுவலகம்.

“ஸார், உங்கள் ஆபீஸ் இருக்கிற இடம் அவ்வளவாகப் பாதுகாப்பு உள்ளதல்ல. இருட்டு முன்பு வீடு திரும்பிவிடுவதென்று வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று நடந்து கொண்டே என்னை எச்சரித்தான் பணிக்கர்.

"அது சரி, பணிக்கர்,"இந்த நம்பூதிரி என்ன பேயா, பிசாசா? நாலு பேர் குடியிருக்கிற இடத்தை விட்டு எதற்கு இப்படி எட்டாத இடத்தில் வீடு கட்டிக்