பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கொண்டு இருக்கிறார்? பெண்டு பிள்ளைகளோடு வசிக்கிறவருக்கு இது என்ன செளகரியமோ?” என்று பணிக்கரைக் கேட்டேன்.

“பெண்டுகளாவது, பிள்ளைகளாவது அவர் ஒண்டிக்கட்டைதான்.அந்தப் பெண் தினகரி இருக்கிறாள். தாயில்லாப் பெண். நம்பூதிரி இளம் வயசிலேயே மனைவியை இழந்தவர். தினகரியின் புருஷன் எங்கேயோ வடக்கே மிலிடரியில் இருக்கிறர்னாம். நம்பூதிரிக்குச் சொந்த ஊர் குட்ட நாட்டுப் பக்கம். நாலைந்து வருஷங்களுக்கு முன் அவராக இங்கு வந்து வீடு கட்டிக் கொண்டு குடியேறியிருக்கிறார்” என்று அவன் சொன்னான்.

மறுநாள் காலையில் நான்நம்பூதிரி வீட்டு அறையில் குடியேறிவிட்டேன் .நம்பூதிரி என்னோடு அளவாகப் பேசினார். நன்றாகப் பேசினார். தம் குடும்பத்தில் ஒருவன்போல் கருதி ஒட்டுறவு காட்டினார். நான் அவரிடம் மலையாளம் படிக்க ஆரம்பித்தேன். புதிய மொழியான மலையாளத்தை உச்சரிக்கத் தெரியாமல் அவருக்கு முன் நான் திணறுவதைச் சமையலறைத் தட்டி மறைவிலிருந்து கருவிழிகளின் வெண்பரப்பு அகல ஒரு நிலவு முகம் எட்டிப்பார்த்துச் சிரிக்கும். கபடமில்லாத சிரிப்பு அது."தினகரி, இவர் உனக்குத் தமையன் மாதிரி, அம்மா” என்று நம்பூதிரி ஒருநாள் தம் பெண்ணிடம் என்னை வைத்துக் கொண்டு கூறியபோது எனக்குப் புனிதமானதொரு சிலிர்ப்பு உண்டாயிற்று. கந்தர்வ உலகத்துச் சிற்பி ஒருவனின் தனிக் கவனத்தில் உருவாகி வந்த தந்தச் சிலை போல் விளங்கும் தினகரிக்குத் தமையன் என்று ஒருவர் சொல்லிக் கேட்பதே இன்பமல்லவா?

‘அண்ணன் அண்ணன்' என்று என்னிடம் தனி ஒட்டுதலோடு பழகினாள் நம்பூதிரியின் பெண் தினகரி. மிகச் சில நாட்களிலேயே அந்தக் குடும்பத்தில் ஒருவனைப்போல் நான் நெருக்கம் பெற்றுவிட்டேன்.

தலை நிறைய பூச்சூடிக் கொண்டு நெற்றி நிறைந்த திலகத்தோடும் இதழ் நிறைந்த சிரிப்போடும் அவள் எதிரே வந்துவிட்டால் வேறு வேலையே ஓடாது எனக்கு. நம்பூதிரியிடம் படித்தேன் என்று பேரே ஒழிய, அந்தப் பெண் தினகரியிடம் வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் பேசியே முக்கால்வாசி மலையாளம் தெரிந்து கொண்டேன்."அண்ணன் இந்தக் கடிதத்தைப் படித்துச்சொல்ல வேண்டும்" என்று விகல்பமில்லாமல், கணவனிடமிருந்து வந்திருக்கும் தபாலைக் கொண்டு வந்து நீட்டுவாள். அவள் கணவன் கிருஷ்ணன் நம்பூதிரி எப்போதாவது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவளுக்குக் கடிதம் போடுவான். பூனாவுக்கு அருகிலுள்ள கிரக்கியில் மிலிட்டரி முகாமில் இருக்கிறானாம் அவன். அவன் எழுதுகிற கடிதங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். மனைவிக்கு மலையாளத்தைத் தவிர வேறு எந்த மொழியும் படிக்கத் தெரியாதென்று அறிந்து கொண்டே ஆங்கிலத்தில் அவளுக்குக் கடிதம் எழுதும் அவன்மேல் எனக்குக் கோபம் உண்டாகும்.நம்பூதிரிக்கும் ஆங்கிலம் தெரியுமாதலால் வழக்கமாக அவர்தாம் படித்து மலையாளத்தில் அதன் சுருக்கத்தை மகளுக்குச் சொல்வாராம்.அவர் தொழில் சம்பந்தமாக வெளியூர்களுக்குப்