பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி நெருப்புக் கோழி 295

போகும்போது என்னிடம் கொண்டு வந்து கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள் தினகரி.

கணவனுடைய கடிதத்தைப் படித்துச் சொல்லும்போது அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அப்போது அந்த முகத்தில் நாணத்தின் அழகும் நளினமும் கொஞ்சும், புதுமணப் பெண்ணின் பொலிவு தோன்றும். அவளுடைய கணவனின் கடிதத்தைப் படித்துச் சொல்லும்போது இதயமில்லாத அந்த முரட்டு மிலிடெரிக்காரன் மேல் எனக்குக் கோபம் கோபமாக வரும். காரணம்? வழக்கமாக ஒரே விதமான பல்லவியை மாற்றி மாற்றி எழுதியிருப்பான். நாலைந்து ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து இருப்பவனின் ஏக்கமோ அன்போ அந்தக் கடிதங்களின் வாக்கியங்களில் பெருக்கெடுத்து ஓடாது.

'தினகரிக்குக் கிருஷ்ணன் எழுதிக் கொண்டது. நீயும் அப்பாவும் நலமென்று நினைக்கிறேன். எனக்கு லீவு கிடைப்பது அருமையாக இருக்கிறது. கல்யாணமான புதிதில் உன்னைப் பிரிந்து வந்தவன் இத்தனை வருடங்களாக ஒரு தடவை கூட வந்து பார்க்க முடியாமல் போயிற்று. நினைத்தால் எனக்கே வருத்தமாகத்தான் இருக்கிறது. கவலைப்படாதே. விரைவில் லீவு கிடைக்கும், வருகிறேன்!” வழக்கமாக நான் படித்துச் சொல்லிய இரண்டு மூன்று கடிதங்களில் இதே விஷயத்தைத்தான் எழுதியிருந்தான்.

கல்யாணமாகும்போது தினகரிக்குப் பத்து வயசாம். பேதமை கலையாத இளமையிலேயே நம்பூதிரி குட்ட நாட்டில் தம் சொந்த ஊரியிலேயே அந்தக் கல்யாணத்தை நடத்தினாராம். கல்யாணம் முடிந்த மூன்றாம் மாதம் வடக்கே போன அவள் கணவன் இன்றுவரை ஒருமுறைகூட வந்து செல்வதற்கு லீவு கிடைக்கவில்லையாம். பின்பு, சில மாதங்கள் கழித்துத்தான் நம்பூதிரி சொந்த ஊரை விட்டு இந்த மலைப் பகுதிக்கு வந்து வீடு கட்டிக் கொண்டு குடியேறினாராம்.

தினகரி பேதை, சூதுவாதில்லாதவள். மண்ணுலகத்துச் சிறுமைகள் என்னும் வெப்பக் காற்றுப் படாத பனிமலராய் மலைகளின் சூழலில் தனிமையில் வளர்ந்தவள் அவள். நினைவு மலராத பருவத்தில் பார்த்திருந்த கணவனிடமிருந்து கடிதம் வருகிறது என்பதே போதும். அவன் குரலையே காதில் கேட்பதுபோல் அவனது ஒவ்வொரு கடிதத்தையும் ஆர்வத்தோடு வரவேற்க அவளால் முடியும். ஒரே மாதிரி எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் படிக்கச் சொல்லிக்கேட்கும்போது புதிது புதிதாக நாணமும் நளினமும் கொள்ளத் தெரியும் அவளுக்கு.

இரண்டு மூன்று நாட்களாக மலைப்பகுதியில் நல்ல மழை. நான் வீட்டை விட்டு வெளியேறவே இல்லை. "மழைக்காலம் முடிகிறவரை அண்ணன் வெளியே சாப்பாடு வைத்துக் கொள்ளக்கூடாது. இங்கேதான் சாப்பாடு” என்று தினகரி உத்தர்வு போட்டுவிட்டாள். நம்பூதிரிகள் ஊரில் இல்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்து உட்கார்ந்தவன் பொழுது போகாமல் அலமாரியிலிருந்து ஒரு தடிமனான புத்தகத்தை உருவினேன். தூசி படிந்து போயிருந்த அந்த மலையாளப்