பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

புத்தகத்தின் நடுவிலிருந்து ஒரு கற்றைப் பழைய கடிதங்கள் விழுந்தன. ஏதோ ஒர் ஆவல் அந்தக் கடிதங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று தூண்டியது. புத்தகத்தை வைத்துவிட்டு அந்தக் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். எல்லாம் தினகரிக்கு அவள் கணவனிடமிருந்து வந்திருந்த பழைய கடிதங்கள். யாவும் பூனாவிலிருந்து எழுதப்பட்டிருந்தன. லீவு கிடைக்கவில்லை, கிடைத்ததும் வர முயலுகிறேன்' என்பதுதான் அவற்றின் சுருக்கம்.

தற்செயலாகப் பார்த்துக்கொண்டே வந்தவன். அந்தக் கடிதங்களுக்கும் அவை வந்திருந்த உறைகளுக்கும் முரண்பாடு இருப்பதைக் கண்டு திகைத்தேன். எல்லா கடிதத் தாள்களின் தலைப்பிலும், கிருஷ்ணன் நம்பூதிரி - மிலிடரி குவாட்டர்ஸ் - ரேஞ்சு ஹில்ஸ்-கிரிக்கி-பூனா’ என்ற விலாசம் இருந்தது.ஆனால் கடிதங்கள் வந்த உறைகளின் தபால் முத்திரையில் வெவ்வேறு ஊர்களில் போஸ்ட் செய்ததற்கு அடையாளமான ஊர்ப் பெயர்கள் காணப்பட்டன. ஓர் உறையில் பாலக்காட்டு முத்திரை, இன்னொன்றில் கோட்டயம், மற்றொன்றில் ஆலப்புழை என்று மலையாளத்துப் பக்கத்தைச் சேர்ந்த ஊர்களாகவே தபால் முத்திரைகள் விழுந்திருந்தன. வேறு கடிதங்கள் வந்த உறைகளில் இந்தக் கடிதங்களைத் தவறி வைத்திருப்பார்களோ என்று சந்தேகம் ஏற்பட்டது. என் சந்தேகம் தீர்வதற்கு நான் ஒரு வழி செய்தேன்.

தினகரியிடம் போய் சமீபத்தில் அவள் கணவனிடமிருந்து அவளுக்கு வந்த கடிதங்களைக் கேட்டேன்.

"அண்ணனுக்கு அந்தக் கடிதங்கள் எதற்கோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.

“கொடுத்தால் எதற்கென்று அப்புறம் சொல்கிறேன்” என்றேன். மறுபேச்சுப் பேசாமல் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்த கடிதங்களை என் அறைக்குக் கொண்டு போய் உறைகளையும் உள்ளே எழுதியிருந்த விலாசங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அந்த உறைகளிலும் அதேமாதிரி முரண்பாடு இருந்தது. பூனாவில் எழுதிய கடிதத்தைத் திருவனந்தபுரத்திலிருந்தும், நீலாம்பூரிலிருந்தும் எப்படித் தபாலில் போடமுடியும்?' என்று எண்ணித் திகைத்தேன்.

தினகரியின் கணவன் பூனாவில் மிலிடரியில் வேலை பார்ப்பதாக ஏமாற்றிக் கொண்டு மலையாளப் பிரதேசத்திலேயே ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறானோ என்றும் ஐயுற்றேன். ‘அடடா! தினகரிதான் பேதைப் பெண்; ஏமாந்திருக்கிறாள். நம்பூதிரி கூடவா இதைத் தெரிந்து கொள்ளாமல் மாப்பிள்ளை புனாவில் மிலிடரியில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? கோட்டயத்திலும், ஆலப்புழையிலும் இருந்து கொண்டு இத்தனை ஆண்டுகளாகத் தினகரியைச் சந்திக்க வராததை நினைத்தால், அந்தப்பயல் வேறு எவளையாவது மணந்து கொண்டு விட்டானோ? என்றுகூடச் சந்தேகம் ஏற்பட்டது எனக்கு. இதில் ஏதோ குது இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நம்பூதிரியும், தினகரியும் ஏமாந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும்' என்று முடிவுசெய்துகொண்டேன். பூனாவில் தினகரியின் கணவன் இல்லையானால்