பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நெருப்புக் கோழி 297

இங்கிருந்து அவள் அவனுக்கு எழுதும் பதில் கடிதங்கள் எப்படிப் போய்ச் சேரமுடியும்? என்று மறுபடியும் வேறொரு சந்தேகம் ஏற்பட்டது.

'தினகரி! நீ உன் கணவருக்குப் பதில் கடிதங்கள் எழுதுவதுண்டோ?” என்று அவளிடம் போய்க் கேட்டேன்;

"ஓ! நான் மலையாளத்தில் கடிதம் மட்டும் எழுதிக் கொடுப்பேன். அப்பா அதை வாங்கிக் கொண்டு போய்க் கவரில் பூனா விலாசம் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிவிடுவார்” என்ற அவள் உற்சாகமாகப் பதில் சொன்னாள்.என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நான் ஒரு தந்திரம் செய்தேன். அப்போது கிறிஸ்துமஸ் சமயம். உறையின் மறுபுறம் என் ஆபீஸ் முகவரியைத் தெளிவாக எழுதித் தினகரியின் கணவன் பெயருக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதம் ஒன்றை பூனா விலாசத்துக்கு அனுப்பினேன்.

நான் அனுப்பிய எட்டாவது நாள், 'விலாசதார் இல்லை' என்று சிவப்பு மையால் அடித்து எழுதப்பட்டு எனக்கே திரும்ப வந்துவிட்டது கிறிஸ்துமஸ் வாழ்த்து.ஆனால், அதைவிடப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அன்றைக்கு அதே தபால்காரன் தினகரிக்குப் பூனாவிலிருந்து அவள் கணவன் எழுதிய வேறொரு கடிதத்தையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தான். அதை நான்தான் தினகரிக்குப் படித்துச் சொன்னேன்.

“லீவு கிடைக்கவில்லை. முடிந்தால் ஒணம் பண்டிகைக்கு வந்துவிடுகிறேன். கவலைப்படவேண்டம்” என்று வழக்கம் போல் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்திலும் தலைப்பில் பூனா முகவரி இருந்தது. உறையின் மேல் 'கோட்டயம் தபாலாபீஸ் முத்திரை விழுந்திருந்தது. என் சந்தேகம் மேலும் உறுதிப்பட்டது.

அன்றைக்குப் பகலில் நம்பூதிரி ஊரிலிருந்து வந்துவிட்டார். நேரம் வாய்க்கும்போது என் சந்தேகத்தை அவரிடம் கூறி எச்சரிக்க வேண்டுமென்று எண்ணினேன். பூனாவில் அவள் கணவன் இல்லையானால் தினகரி அவனுக்கு எழுதும் கடிதங்கள் மட்டும் திரும்பி வராமல் எப்படிக் கிடைத்துக் கொண்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கு மட்டும் தெளிவான விடை கிடைக்காமல் குழப்பம் ஏற்பட்டது எனக்கு.

அன்றைக்கு வந்திருந்த கணவனின் கடிதத்துக்குப் பதில் எழுதிப் போஸ்ட் செய்யுமாறு தினகரி தந்தையிடம் கொடுத்தாள். அப்போது நானும் அருகில் இருந்தேன்.

"ஐயா! மாப்பிள்ளையின் முகவரியை எழுதிக் கடிதத்தை என்னிடம் கொடுங்கள். நான் தபாலாபீஸ் பக்கந்தான் போகிறேன். நானே போட்டு விடுகிறேன். உங்களுக்குச் சிரமம் வேண்டாம்” என்று நம்பூதிரியிடம் போய் வலுவில் கேட்டேன். என்னை ஒரு மாதிரி கடுமையாக நிமிர்ந்து பார்த்தார் நம்பூதிரி. அதற்குமுன் அவர் அவ்வளவு கடுமையாகப் பார்த்து நான் கண்டதே இல்லை. எனக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. "