பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

"அவசியமில்லை! நீங்கள் போகலாம். எனக்குப் போஸ்ட் செய்யத் தெரியும்" என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டார் அவர் நான் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினேன். என் மனத்தில் மேலும் மேலும் சந்தேகங்கள் குழம்பின.

சிறிதுநேரத்தில் நம்பூதிரி தபாலாபீசுக்குப் புறப்பட்டுப் போவதை என் அறை வாசலிலிருந்தே பார்த்தேன். தினகரி வந்தாள். "அப்பா ஏதோ முன்கோபத்தில் வெடுக்கென்று சொல்லிவிட்டார்.அதை மனத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று மன்னிப்புக் கேட்பதுபோல் சொன்னாள். அப்போது அவள் முகத்தைப் பார்த்தேன். பேதையே! இப்படி ஒன்றும் தெரியாத பெண்ணாக எத்தனை நாள் இருக்கப் போகிறாய் என்று நினைத்துக் கொண்டேன். கூந்தல் நிறைய மல்லிகைப் பூவும், நெற்றி நிறையத் திலகமுமாய்ச் சிரித்துக் கொண்டு நின்றாள் தினகரி,

“கொஞ்சம் இரு, தினகரி. இதோ வந்துவிடுகிறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு நம்பூதிரியைப் பின்பற்றிப் போஸ்ட்டாபீசுக்குச் சென்றேன். தினகரியின் கடிதத்தை எந்த முகவரி எழுதி அவள் கணவனுக்குப் போஸ்ட் செய்கிறார் என்பதைப் பார்த்துவிடத் துடித்தது என் உள்ளம். போஸ்ட்டாபீசுக்குப் போகிற வழியில் தேக்கங்கன்றுகளின் புதருக்கருகில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. சந்தேகத்தோடு அருகில் சென்று குனிந்து கையில் எடுத்தேன். உறையோடு அப்படியே இரண்டாகக் கிழிக்கப்பட்ட கடிதம் அது. மேலே தினகரியின் கணவனுடைய முகவரி ஆங்கிலத்தில் நம்பூதிரியின் கையெழுத்தால் தெளிவாக எழுதப்பட்டுக் கிழிந்திருந்தது.

என் கைகள் நடுங்கின. மனம் கொதித்தது. உள்ளே இரு துண்டாகக் கிழிந்திருந்த கடிதத்தை மெல்ல எடுத்துத் தினகரி என்ன எழுதியிருக்கிறாள் என்று ஒன்று சேர்த்துப் படிக்க முயன்றேன்.அது தன் கணவனுக்கு அனுப்புவதற்காகத் தினகரி அன்று எழுதித் தந்தையிடம் தபாலில் சேர்க்கச் சொல்லிக் கொடுத்த கடிதந்தான். அவள் மலையாளத்தில் எழுதியிருந்ததை நான் புரிந்து கொண்ட வகையில் கீழே கண்டவாறு தமிழாக்கித் தருகிறேன்.

“அடியாள் தினகரிதங்கள் பாதாரவிந்தங்களுக்குக் கோடானுகோடி வணக்கங்கள். உங்கள் கடிதம் கிடைத்தது. அப்பா, நான் எல்லோரும் செளக்கியம். இப்போது நம் வீட்டு முன் அறைக்கு ஒரு பாரஸ்ட்ரேஞ்சர் குடி வந்திருக்கிறார். மிகவும் நல்ல மனிதர் நான் அந்த அண்ணனிடம் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். உங்கள் கடிதங்களைக்கூட அப்பா ஊரில் இல்லாதபோது அண்ணன்தான் எனக்குப் படித்துச் சொல்லுகிறார்.நீங்கள் எப்போது இங்குவரப்போகிறீர்கள்? அண்ணனுக்கு உங்களைப் பார்க்க வேண்டுமென்று நிரம்ப ஆசை. 'உன் கணவர் ஒரே மாதிரி கடிதமாக உப்புச் சப்பில்லாமல் எழுதுகிறாரே! மனைவிக்குக் கணவன் எழுதுகிற கடிதத்தில் அன்பைக் கொட்டிக் கொட்டி எழுத வேண்டாமா? என்று அண்ணன் உங்கள் கடிதத்தைப் படித்துச் சொல்லும்போது என்னைக் கேலி செய்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. அண்ணன் சொல்லுகிற மாதிரி இனிமேல் நீங்கள் எனக்கு அன்பைக்