பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நெருப்புக் கோழி 299

கொட்டி எழுதாவிட்டால் அந்தக் கடிதத்தை நான் உங்களுக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டியதுதான்.

“இங்கே மழை விடாமல் பெய்கிறது. நம் வீட்டு முல்லைக்கொடி நன்றாகப் பூக்கிறது. அவ்வளவு பூவையும் நான் ஒருத்தியே வைத்துக் கொள்கிறேன். அப்பாவிடம் சொல்லி எஸ்டேட் தோட்டத்திலிருந்து குண்டுமல்லிகைச் செடியும் ரோஜாப் பதியனும் கொண்டுவர இன்று ஏற்பாடு செய்திருக்கிறேன். நம் வீட்டுத் தோட்டத்தில் வைக்க வேண்டும். நீங்கள் சீக்கிரம் இங்கு வர வேண்டும். இந்த வருட ஒணம் பண்டிகையையாவது நீங்கள் வீட்டில் கொண்டாட வேண்டுமென்பது அடியாளின் ஆசை.

இப்படிக்கு
உங்கள் பிரியமுள்ள தினகரி”


இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் என் உள்ளம் உருகியது. தான் எழுதுகிற கடிதங்கள் கணவனுக்கு அனுப்பப்படாமலே கிழிக்கப்படுகின்றன என்பதை அறிந்தால் அந்தப் பேதைப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும் வேதனை மிக்க மனத்தோடு அந்தக் கிழிந்த கடிதத்தை அப்படியே சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

'தினகரி எழுதும் கடிதங்களை அவள் தந்தை போஸ்ட் செய்யாமலே கிழித்தெறிந்து விடுகிறார். அதேபோல் தினகரிக்கு வரும் கடிதங்களையும் எழுதுகிறவன், அவள் கணவன் அல்லன். நம்பூதிரியே எழுதிப் போஸ்ட் செய்கிறார்’ என்று தெளிவாகத் தெரிந்தது எனக்கு அவர் அடிக்கடி மாந்திரிகத் தொழிலுக்காகக் கோட்டயத்துக்கும், திருவனந்தபுரம் முதலிய பிற ஊர்களுக்கும் போக நேரும்போது அங்கிருந்தே கடிதங்களைப் போஸ்ட் செய்ய வசதி இருந்தது. தினகரிக்கு வந்த கடிதங்களையும், அவள் எழுதிய கடிதத்தின் உறையில் நம்பூதிரி எழுதிய விலாசத்தையும் ஒப்பிட்டு நோக்கியபோது கையெழுத்துக்களின் ஒற்றுமையை என்னால் அநுமானம் செய்து உணர முடிந்தது. தம்முடைய மலையாளக் கையெழுத்தைத் தினகரி அடையாளம் கண்டுகொள்வாளென்று எண்ணியே அவள் கணவன், எழுதுவதாகத் தாமே எழுதி அனுப்பும் கடிதங்களை எல்லாம் நம்பூதிரி ஆங்கிலத்தில் எழுதுவதாகத் தோன்றியது எனக்கு.

'பெற்ற தந்தையே இப்படி மகளை ஏமாற்றிக் கெடுதல் செய்ய முடியுமா?’ என்று எண்ணியபோது என் மனம் அதை நம்புவதற்கே தயங்கியது; பயந்தது. நம்பூதிரி வந்ததும் அவரைப் பார்த்துக் கேட்க வேண்டுமென்று துடித்தேன்.

"உடம்புக்கென்ன? சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறீர்களே!” என்றாள் தினகரி.

“ஒன்றுமில்லை தினகரி,தலையை இலேசாக வலிக்கிற மாதிரி இருக்கிறது.அப்பா போஸ்டாபிசிலிருந்து திரும்பி வந்ததும் நான் அவரைப் பார்க்க வேண்டும்” .

"போஸ்டாபீஸிலிருந்து திரும்பி வரும்போது அப்பாவை எஸ்டேட் தோட்டத்துக்குப் போய்க் குண்டுமல்லிகைச் செடியும் ரோஜாப் பதியணும்