பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


எடுத்துக்கொண்டு வரச்சொல்லியிருக்கிறேன். நம் வீட்டுத் தோட்டத்தில் வைக்க வேண்டும்.” இதைச் சொல்லும்போது தினகரி சிறு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து ஆர்வத்தோடு சொன்னாள்.

“குண்டு மல்லிகையும் ரோஜாவும் எதற்கு தினகரி?”

“பூவுக்கு, பூ என்றால் எனக்குக் கொள்ளை ஆசை. அவ்வளவு பூவையும் நானே வைத்துக்கொள்ளுவேன்” என்றாள் தினகரி. இதைக் கூறும்போதுதான் அந்த முகத்தில் எத்தனை மலர்ச்சி!

இருட்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் குண்டு மல்லிகைச் செடியும் ரோஜாப் பதியனும் எடுத்துக் கொண்டு நம்பூதிரி வந்தார். தினகரி அவற்றை வாங்கிக் கொண்டு நடுவதற்காகத் தோட்டத்திற்குப் போய்விட்டாள்.

“உங்களிடம் ஒரு விஷயம் தனியாகக் கேட்க வேண்டும். இப்படிக் கொஞ்சம் வருகிறீர்களா?” என்று நம்பூதிரியை என் அறைக்குள் அழைத்தேன். நம்பூதிரி வந்தார்; உட்காரச் சொன்னேன். உட்கார்ந்தார். அறைக் கதவைச் சாத்தி உட்புறமாகத் தாழிட்டேன். கிழிந்த கடிதத்தை எடுத்துக்காட்டி, “இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டேன். அவர் முகம் பயந்து வெளிறியது. என்னைப் பார்க்க வெட்கப்படுவது போல் தலையைக் குனிந்து கொண்டு கீழே பார்த்தார்.

“உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட்டுப் பேசுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். தினகரியின் கணவன் பூனாவில் மிலிடரியில் இல்லை என்பதையும், அங்கிருந்து அவன் தினகரிக்கு எழுதுவதாக நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கோட்டயத்திலும் நீலாம்பூரிலும் கடிதங்களைப் போஸ்ட் செய்கிறீர்கள் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன. எதற்காக இப்படியெல்லாம் செய்து உங்களையும் உங்கள் பெண்ணையும் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?” என்று ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு அவர் காதில் படும்படி கேட்டேன். எனக்கு அப்போது அவர் முகத்தைப் பார்ததுக் கொண்டு பேசப் பிடிக்கவில்லை.

அவர் மறுமொழி கூறவில்லை. மெல்ல விசும்பிக் கொண்டே அழும் ஒலி என் செவிகளில் விழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். நம்பூதிரி அழுது கொண்டிருந்தார். பச்சைக் குழந்தைபோல விக்கலும் விசும்பலுமாகக் குலுங்கக் குலுங்க அழுது கொண்டிருந்தார். நான் திகைத்துப் போய் நின்றேன். நம்பூதிரி அழுது கொண்டே எழுந்திருந்து அந்த அறையில் இருந்த அலமாரியிலுள்ள பழைய புத்தகங்களைக் கலைத்து மேலும் கீழுமாக எதையோ தேடினார். சிறிது நேரத்தில் அழுக்குப் படிந்த பழைய கவர் ஒன்று அவர் கையில் கிடைத்தது. அதைப் பிரித்து என்னிடம் நீட்டினார். அதை என்னிடம் கொடுக்கும்போது அவருடைய கைவிரல்கள் நடுங்கின. அழுகை அதிகமாகியது. வாங்கிப் படித்தேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மிலிடரியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அது.

“நாகபுரிக்கு விமானப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட உங்கள் கணவர் விமானத்திலிருந்து விபத்துக் காரணமாக கீழே விழுந்து இறந்து போனார்.”