பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / நெருப்புக் கோழி * 301

என்ற தினகரியின் பெயருக்கு மிலிடரியிலிருந்து வந்திருந்தது அந்தச் செய்தி. அதைப் படித்து முடித்ததும் எனக்குத் தலையில் இடி விழுந்தாற் போலிருந்தது.

நம்பூதிரி அதே அலமாரியில் இருந்த ஒரு பழைய தோல் பெட்டியைத் திறந்தார். தூசி படிந்து பாச்சை அரித்துப் பழுப்பேறியிருந்த மிலிடரி உடைகளின் ‘ஸெட்” ஒன்றைத் தூக்கி என் முன் எறிந்தார். இறந்து போனவர்களின் உடையை உரியவர்களுக்கு அவ்வாறு அனுப்பி வைப்பது மிலிடரி வழக்கம்.

நம்பூதிரிகளின் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவருடைய அழுகை நிற்கவில்லை. அருகில் வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சும் குரலில் கூறலானார்:"ஐயா, என் பெண் பேதை கசப்புத் தெரியாமல் வளர்ந்தவள், தாயில்லாப் பெண், இன்றுவரை அந்த முகத்தில் வாட்டம் தெரியவிடாமல் வளர்த்துவிட்டேன். பூவும் திலகமுமாகச் சிரித்துக்கொண்டு திரியும் வானம்பாடியாக இருக்கிறாள். இந்த உண்மையை மறைப்பதற்குத்தான் நாலைந்து வருடங்களுக்கு முன் சொந்த ஊரைவிட்டு மனிதப் பழக்கம் அதிகமில்லாத இந்த மலைக்காட்டில் வீடு கட்டிக் கொண்டு குடியேறினேன். என்ன என்னவோ பொய்க் கடிதங்களை எழுதியும் ஏமாற்றியும் இந்த விநாடிவரை அந்தக் கசப்பான உண்மை அவளுக்குத் தெரியவிடாமல காப்பாற்றிவிட்டேன். இன்று உங்களால் அது தெரிந்துவிடும்போல் இருக்கிறது. தயவுசெய்து அவளிடம் உண்மையைச் சொல்லிவிடாதீர்கள். உங்களைக் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஒரே பெண். அவளுக்கு விதவைக் கோலம் பூட்டிப் பார்க்க வேண்டாம். அவள் நித்திய கல்யாணியாய் உதட்டில் சிரிப்பும் நெற்றியில் திலகமும் தலையில் பூவுமாக என்முன் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.நான் உயிர் வாழ்வதன் ஒரே லட்சியம் அதுதான்” என்று சோகம் கனிந்த குரலில் கதறி, பராசக்தி ஆணையாக அந்தச் செய்தியை தினகரியிடம் கூறுவதில்லை என்று என்னிடம் சத்தியமும் செய்து வாங்கிக் கொண்டார்.

அப்போது அறை வாசலில் காலடியோசை கேட்டது. 'தினகரி தோட்டத்திலிருந்து வந்துவிட்டாள். நான் போகிறேன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்து வெளியேறினார் அவர்,

"அப்பா, ரோஜாப் பதியனும் மல்லிகைச் செடியும் ஊன்றித் தண்ணிர் ஊற்றியாயிற்று. ஒணம் பண்டிகைக்குள் அரும்பு கட்டிப் பூத்துவிடும். ஒனத்துக்கு அவர் வரும்போது என் தலைக்கு ரோஜா வைத்துக் கொள்ளலாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிக் கொண்டே தோட்டத்திலிருந்து ஓடி வந்தாள் தினகரி.

"ஆமாம், பெண்ணே ஒணத்தின்போது நிச்சயமாக உன் கணவன் புனாவிலிருந்து வந்துவிடுவான். நான் நாளைக்கு இன்னொரு கடிதமும் அவனுக்கு வற்புறுத்தி எழுதுகிறேன். மிலிடரியில் லீவு கிடைப்பது அருமை” என்று அறை வாசலில் உற்சாகமாக அவர் தினகரியிடம் கூறிக் கொண்டிருந்த பொய் அறைக்குள் எனக்குக் கேட்டது. அந்த உண்மையை மனத்தில் வைத்துக் கொண்டு அதே வீட்டில் நடமாட