பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

முடியுமா என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. அன்றிரவு நெடுநேரம் எனக்குத் துாக்கமே இல்லை. தினகரியின் பேதைமை மிளிரும் மதிமுகம் உருவெளியில் என் கண்முன் தோன்றி, "எனக்குப் பூ என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்று கள்ளமில்லாச் சிரிப்போடு கூறுவது போல ஒரு பிரமை.

பொழுது விடிந்தது. நான் குஞ்சுப் பணிக்கரைக் கூப்பிட்டனுப்பினேன்.“பணிக்கர், நான் இரண்டு மாதம் லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போகிறேன். லீவு முடிந்ததும் அநேகமாக வேறு ரேஞ்சுக்கு மாற்றல் வாங்கிக் கொள்ளலாமென்று பார்க்கிறேன்” என்றேன்.அவன் ஒன்றும் புரியாமல் திகைப்போடுதலையை ஆட்டினான்.அங்கிருந்து புறப்படுகிற முதல் பஸ்ஸில் கிளம்பிவிடத் தீர்மானித்தேன்.

நான் புறப்படுகிற சமயத்தில் நம்பூதிரி வீட்டில் இல்லை. அந்த மிலிடரி உடையையும் கடிதத்தையும் அங்கே தங்கவிடாமல் என்னோடு எடுத்துக் கொண்டு போய்விடுவது நல்லதென்று எனக்குத் தோன்றியது. அப்படியே அவற்றை 'ஒல்டா' லில் வைத்துக் கட்டி எடுத்துக் கொண்டுவிட்டேன். பணிக்கர் சாமான்களைத் துரக்கிக் கொண்டு முன்னால் நடந்தான். தினகரி வாசலில் முல்லைக்கொடியில் பூப்பறித்துக் கொண்டிருந்தாள். பணிக்கர் சாமான்களோடு முன்னே சென்றதைக்கூட அவள் கவனிக்கவில்லை. நான் அருகிற் சென்றேன். 'தினகரி' என்று அழைத்தேன்.

“இன்றைக்குக் கொள்ளை போகிறாற்போல் பறிக்கப் பறிக்க மாளாமல் பூத்துத் தள்ளியிருக்கிறது இந்த 'முல்லைக்கொடி' என்று சொல்லிக் கொண்டே திரும்பினாள் அவள் என்பயணக் கோலத்தைப் பார்த்துவிட்டு, "அண்ணன் எங்கோ வெளியூருக்குக் கிளம்புகிறாற் போலிருக்கிறதே" என்றாள்.

"ஆமாம்” என்றேன்.

"திரும்ப எத்தனை நாட்களாகுமோ?”

“ரொம்ப நாளாகும்.”

"அப்படியானால் அண்ணன் திரும்பும்போது ரோஜாப்பூ பதியனில் அநேகமாக அரும்பு கட்டிவிடும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் தினகரி. அந்தச் சிரிப்பும் அறியாமையழகும் என்றும், அப்படியே அவளிடம் இருக்கட்டும் என்று மனத்தில் வாழ்த்திக் கொண்டே புறப்பட்டேன்.

பஸ் புறப்பட நேரமிருந்தது.ஒரு காகிதத்தை எடுத்து "நம்பூதிரிகளுக்குப் பாரஸ்ட் ரேஞ்சர்.அநேக வணக்கம்.நீங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் உங்களிடம் சொல்லிக் கொள்ளாமலே நான் ஊருக்குப் போகிறேன். நான் பலவீனமுள்ள மனிதன். என் மனத்துக்கும் நாவுக்கும் அவ்வளவு உறுதி போதாது. நெருப்புக் கோழியைப்போல எவ்வளவு கடுமையான உண்மையானாலும் அதன் வெம்மையைச் சீரணித்துக் கொண்டு திடமாக வாழ உங்களுக்கு முடிகிறது. உங்கள் பேதைப் பெண்ணை நீங்கள் என்றும் சுமங்கலியாகவே பார்த்துக் கொண்டிருப்பதற்கு என்னால் இடையூறு நேர்ந்துவிடக்கூடாது. பூவும் திலகமுமாக உங்கள் பெண் சிரித்துத் திரிய வேண்டும்