பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38. மண் புழுக்கள்

கொளுத்து கொளுத்தென்று காய்கின்ற உச்சி வெய்யிலில் மாடாக உழைத்துக் கொண்டிருந்தான் வேலையன். கரணை கரணையாகச் சதை வைத்த தோள்களிலும், மார்பிலும், வேர்வை வழிந்து வெய்யிலில் மின்னிற்று. இரண்டு கைகளாலும் மண்வெட்டியைத் தலைக்கு மேலே தூக்கி ஓங்கி மண்ணில் பாய்ச்சுகிற போது அவனுடைய தோள்கள் புடைப்பதில் ஒரு தனி அழகு இருந்தது. ஹெர்குலிஸ் சிலை மாதிரி மேலே அகன்று இடையில் ஒடுங்கிய ஆண்மை லட்சணமுள்ள மார்பு அவனுடையது. தலையில் ஒரு அழுக்குத் துணி முண்டாசு. அதையும் துளைத்துக் கொண்டு உறைத்தது வெய்யில். இடுப்பில் முழங்காலுக்கு மேல் வரிந்து கட்டிய வேட்டியில் அழுக்கு மண்டிய மண் கறைகள்.

ஒவ்வொரு முறையும் மண்வெட்டி பாய்ந்து மண்ணைப் புரட்டிப் பிளந்து மேலே தள்ளும் போதும் கும்மென்று கிளம்பும் ஈர வாடையோடு மேலெழுந்து பரவிற்று மண்ணின் மணம்.

அந்த மண்ணின் மணம் தன் மூச்சுக் காற்றோடு இழைகிற போதெல்லாம் தன் உழைப்பே அப்படி மணப்பது போல் வேலையனுக்கு ஒரு பெருமிதம், ஒரு பூரிப்பு உண்டாயிற்று.

மண்ணைக் கிளறிக் கொண்டே மண்ணைப் பற்றிச் சிந்திப்பது உற்சாகமாக இருந்தது வேலையனுக்கு. அந்த ஐந்து செண்டு நிலத்தை வெட்டிக் கொத்திப் பாத்தி பிரிப்பது அவனுக்குச் சிரமமான காரியமேயில்லை. இன்றைக்கு ‘வெட்டு வேலை’ முடிந்து விட்டால் எப்படியும் நாளை ஒரு நாளைக்குள் கட்டிகளை உடைத்துச் சமப்படுத்திப் பாத்தி பிரித்து விடலாம். வாய்க்காலும் வகுத்துக் கொள்ளலாம்.

ஈரம் கசிந்த களிச்சத்துள்ள நல்ல மண் அது. கீரையும், தக்காளியும், நான் நான் என்று போட்டி போட்டுக் கொண்டு உண்டாகும்.

பெரிய நிலங்களுக்கு நடுவில் ‘நத்தம் புறம்போக்கு’ப் போல் இருந்தது வேலையனின் ஐந்து செண்டு. சிறிது மேடுபள்ளமாகச் சமமின்றி நன்செய்ப் பயிருக்கும் தகுதியில்லாமல், புன்செய்ப் பயிருக்கும் தகுதியில்லாமல் இரண்டுங் கெட்டானாகக் கிடந்தது அவனுடைய துண்டு நிலம். நீண்டநாள் சிந்தனைக்குப் பிறகு அதில் காய்கறி கீரை பயிர் செய்து பார்க்கலாமென்ற முடிவுக்கு வந்தான் வேலையன்.

நான்கு புறமும் பெரிய பண்ணையார்களுக்கு நடுவே அந்தச் சிறிய ஐந்து செண்டு நிலம் தனித்து இருந்த காட்சி, பச்சைப் பட்டுப் புடைவையும், பகட்டான நகைகளும் அணிந்த நான்கு பணக்காரப் பெண்களுக்கு நடுவே வெறும் கைத்தறிப் புடைவை