பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மண் புழுக்கள் * 305


அணிந்து நகைகளில்லாத மூளி உடம்போடு ஏழைப் பெண்ணொருத்தியும் நிற்பது போலிருந்தது. வடபுறம் புலி வலம் வந்த நல்லூர்ப் பெரிய பண்ணையின் நிலம் ஐம்பது ஏக்கர் ஒரே தாக்காக இருந்தது. தெற்கே மாடிவீட்டு ரங்க நாராயண ஐயரின் பதினைந்து ஏக்கர் முதல் தரமான நன்செய்; பேயனாற்றுக்கால் தலைப்பாசன நிலம். கிழக்கே வீரபத்திரவாண்டையாரின் வாழைத் துரவு; கண் பார்க்க முடிந்த தொலைவு மட்டும் தூண் கொண்டெழுந்த பசுமைப் பரப்பாய் ஒரே வாழைமரக் காடு, மேற்கே முக்காணிமங்கலம் முகுந்தராஜ முதலியாரின் கரும்புத் தோட்டம், எழுபத்திரண்டு ஏக்கர் செங்கரும்புப் பயிர் காற்றில் தோகைகள் சுழல அற்புதமாய்க் காட்சியளிக்கிறது.

அத்தனையும் பணம்! நெல், வாழை, கரும்பு, மட்டுமல்ல! உடைமைக்காரர்களுக்குப் பணமாகவே விளைந்த நிலங்கள் அவை. புலிவலம் வந்த நல்லூர்ப் பெரிய பண்ணையாரும், மாடிவீட்டு ரங்க நாராயண ஐயரும், வீரபத்திர வாண்டையாரும், முகுந்த ராஜமுதலியாரும், வண்டி கட்டிக்கொண்டு வந்துதான் நிலத்தைப் பார்வையிடுவது வழக்கம். எவ்வளவு பெரிய நிலம்? நடந்து சுற்றிப் பார்த்தால் கட்டுபடியாகுமா? மண்ணில் இறங்கி நடந்து விட்டால் கெளரவம் "ஸ்டேட்டஸ்' எல்லாம் என்ன ஆவது? நடத்தை கெட்டவளானாலும் தெருவில் உடம்பை மூடிக்கொண்டு தானே நடக்க வேண்டும்? பணக்காரர்களுக்கு 'அந்தஸ்து’ என்கிற விவகாரமும் இப்படித்தான் இருக்கிறதோ இல்லையோ, வெளியில் 'அந்தஸ்தை' நடித்துக் காட்டினால்தான் பணக்காரர்களுக்குப் பெருமை; பணத்துக்கும் மதிப்பு!

அந்தப் பெரிய பெரிய மிராசுகளுக்கு நடுவே தன்னுடைய 'உள்ளங்கையகல நிலம்’ ஓர் அவமானம் போல் தோன்றினாலும் அதை அப்படியே தரிசாக விட்டுவிட மனமில்லை வேலையனுக்கு. கீரையும், காய்கறியும், பயிர்செய்து விற்றால் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய்க் காசு கூடவா சம்பாதிக்க முடியாது?’ என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்தபின்பே இப்போது அந்த நிலத்தை வெட்டிக் கொத்திக் கொண்டிருந்தான் அவன். மனிதன் சும்மா இருக்கிறவரை யாருமே அவன் பக்கமாகத் திரும்பிக் கவனிப்பதில்லை. நல்லதோ, கெட்டதோ, அவன் எதையாவது செய்ய ஆரம்பித்து விட்டால் எல்லோருடைய கவனமும் அவன் பக்கம் திரும்பிவிடுகிறது. வேலையனுடைய ஐந்து செண்டு நிலம் கரடுதட்டிப் போய்க் குண்டும், குழியுமாய்ச் சும்மா கிடந்தவரை 'முக்காணி மங்கலமும்,' 'புலிவலம் வந்தநல்லூரும்' அதைப் பற்றி நினைக்கவே இல்லை.

ஒரு நாளுமில்லாத திருநாளாய் அன்றைக்கு அந்தப் பள்ளத்துக் கரட்டில் மண்வெட்டி இறங்கும் ஓசையைக் கேட்டபோது புலிவலம் வந்த நல்லூர் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிப் பார்த்தார்.

“ஏலே வேலு! என்னடாது; திடீரென்று இந்தக் காட்டு மேலே இத்தனை அக்கறை? வைரக் கடுக்கன்களும், வலது கையில் சுழன்ற வெள்ளிப் பூண்பிடித்த பிரம்பும் வெய்யிலில் மின்ன மேட்டில் தம் நிலம் முடிகிற இடத்தில் நின்று கொண்டு