பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மிடுக்காக அவனைக் கேட்டார் புலிவலம்வந்த நல்லூர். நெற்றி வேர்வையை வழித்து உதறிவிட்டு நிமிர்ந்தான் வேலையன்.

"ஐயா, சும்மாக் கெடக்கறதைக் கொத்தி ஏதோ நாலு காய்கறி, கீரை போட்டுப் பார்க்கலாமின்னு எண்ணமுங்க”

"அடி சக்கை காய்கறித் தோட்டமா? பலே, ஜமாய்த்துத் தள்ளு.”

"தோட்டமாவது, ஒண்ணாவதுங்க. ஏதோ அஞ்சாறு பாத்திக்கு. அவன் முடிப்பதற்குள் புலிவலம் வந்த நல்லூர் வண்டியில் ஏறிவிட்டார். அதிக நேரம் வேலையனிடம் நின்று பேசிக் கொண்டிருந்தால் அவருடைய அந்தஸ்து என்ன ஆவது? .

மறுபடியும் வேலையணின் கைகள் மண்வெட்டியை இயக்கின. மேற்குப் புறத்து மேட்டில் தம் கரும்புக் கொல்லை முடியுமிடத்தில் 'முக்காணிமங்கலம்' வந்து நின்றார்.

“ஏண்டா வேலையா! உன் 'ஜமீன்லே' ஏதோ பெரிய 'ஸ்கீம்லே' சாகுபிடி ஆரம்பிச்சு நடக்கிறது போலிருக்கே? என்ன சமாசாரம்? வாழையா கரும்பா? நெல்லா?” என்று கிண்டலாகப் பேச்சை ஆரம்பித்தார் முக்காணி மங்கலம்.

"ஐயாவுக்குக் கேலியாத் தோணுது. நமக்கென்ன முப்பது ஏக்கரா நாற்பது ஏக்கரா? உள்ளங்கையிலே பாதி நிலம், ரெண்டு கீரைப்பாத்திக்குக் காணாது. வாழையையும், கரும்பையும், நினைக்கக்கூட முடியாதுங்களே?” என்று சொல்லி முறுவல் பூத்தான் வேலையன்.

இன்னும் சிறிதுநேரம் கழித்து வீரபத்திர வாண்டையார் வந்து, “நமக்கும் நிலமிருக்குங்கறதைக் காண்பிக்கிறதுக்காகக் கொத்துப் போட்டுக் கிட்டிருக்கியா?” என்று கேலி செய்துவிட்டுப் போனார். வாழைத்தார் வெட்டிச் சந்தைக்கு அனுப்பத் தினசரி வந்து போவார் வாண்டையார்.

"அடே வேலையா, இதிலே கீரையும், காய்கறியும் நன்னா வரும்டா, பசையுள்ள மண், அதோ பாரு சிக்கு விழுந்த நூல் மாதிரி எத்தனை மண்புழு நெளியறது? மண் புழுக்கள் துளைக்கிற மண் காய்கறிக்கு நன்னா வரும். நிலம் உரம் வாய்ந்ததுங்கிறதை மண்புழு இருக்கறதாலேயே தீர்மானிச்சிண்டுடலாம்!” என்று தெற்குப் பக்கத்து நிலக்காரர் தலைக்கால் பாசனம் ரங்கநாராயண அய்யர் அவனுக்கு சர்டிபிகேட்” கொடுத்துவிட்டுப் போனார்.

‘சாமீ. எல்லாம் உங்க ஆசீர்வாதம்..” என்று விநயமாகப் பதில் சொல்லி அவரை அனுப்பி வைத்தான் வேலையன். தன் நிலத்தில் கீரையும், காய்கறியும் நன்றாக வரும் என்பது அவனே அறிந்ததுதான். 'புருபுரு' வென்று முறுக்கு மாவு பிசைந்த மாதிரிக் கரிசல் நிறத்துக் களிப்பாங்கான மண், அதில் ரப்பர் நூல்கள் போல ஏராளமான மண்புழுக்கள் நெளிகின்றன. 'மண்புழுவைத் தோட்டக்காரனின் நண்பன்' என்பார்கள். அது மண்ணை உரமுள்ளதாக்குகிறது. சத்துள்ளதாகவும் வளமுள்ளதாகவும் செய்து நல்ல விளைவைத் தருகிறது என்று நாள் தவறாமல்