பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி மண் புழுக்கள் : 307

வீட்டில் தன் மகன் பள்ளிக்கூடத்து 'ஸயன்ஸ்' புத்தகத்தை நெட்டுருப் போடுவதை வேலையன் கேட்டிருக்கிறான்.'ஸயன்ஸ்' என்கிற இங்கிலீஷ் வார்த்தை இந்த நாட்டில் நுழைவதற்கு முன்பே அவனுடைய முப்பாட்டன் காலத்திலிருந்தும் கர்ண பரம்பரையாகவும் அந்த விஷயம் அவனுக்குத் தெரியும்.

“மண்புழு நிறைய இருந்தால் நெலத்துலே ஐசுவரியம் பொங்கும்டா” என்று அவனுடைய தாத்தா அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொண்டே இருப்பார். அதே செய்தியை இப்போது ரங்கநாராயண ஐயரும் கூறக்கேட்டபோது அவனுக்குப் பெருமையும், திருப்தியும் உண்டாயின. தன்னுடைய சொந்த முயற்சியில் உருவாக இருக்கும் காய்கறித் தோட்டத்தில் ஐசுவரியம் பொங்கப் போவதை நினைத்து அவன் மனம் பூரித்தது.

அன்று பொழுது சாய்வதற்குள் 'வெட்டு வேலை' முடிந்து விட்டது. மறுநாள் கட்டிகளை உடைத்துச் சமன் செய்து பாத்தியும், வாய்க்காலும் வகுத்துவிட்டான். மூன்றாம் நாள் விதைத்து நீர்பாய்ச்சி விட்டான். மூன்று பாத்தி அரைக்கீரை, இரண்டு பாத்தி தக்காளி, இரண்டு பாத்தி முளைக்கீரை, ஒரு பாத்தி கொத்துமல்லி, நாலு பாத்தி வெண்டைக்காய். இருக்கிற நிலத்தை நிரந்து பன்னிரண்டு பாத்தியாகப் பிரித்திருந்தான்.

அது நல்ல ஈரச்சத்துள்ள உரமண்! விதைத்த மூன்றாவது நாளில் கீரைப்பாத்திகளில் பொட்டுப் பொட்டாகப் பசுமை தெரிந்தது. ஏழாவது நாளில் வெண்டையும், தக்காளியும் முளை கிளம்பின. பின்பு கொத்துமல்லியும் வெந்தயமும் பொல்லென்று பூத்த பசுமையாய்ப் பாத்திகளை நிறைத்தன. வேலையணின் ஐந்து செண்டு நிலத்தில் ஒரு பசுமைக் கனவு உருவாகி மிளிர்ந்தது.

கீரைகள் அடர்ந்து பசுமை கொழித்து மேலெழும்பி வளர்ந்தன. வெண்டை பூத்தது. தக்காளியும் தன்னுடைய மஞ்சள் நிறப் பூக்களால் மென்னகை புரிந்தது. கொத்து மல்லி பச்சைப் பாசிமணி போல் காய்த்துக் கதிர் வாங்கி மணம் பரப்பியது.

“கொடுத்து வைத்த பயல்டா நீ என்று அவனது காய்கறித் தோட்டம் வாய்த்த விதத்தை வியந்தார் ‘புலிவலம் வந்த நல்லூர்:

“பொட்டல் காட்டிலே என்னமோ செய்து அற்புதம் பண்ணிப்பிட்டியேடா’ என்றார் வாண்டையார்.

"இந்த மாதிரி வெண்டை விதை எங்கேடா கிடைச்சது உனக்கு? கொத்துக் கொத்தாய்க் காய்ச்சுத் தள்ளியிருக்கே யோகக்காரண்டா நீ” என்று கண் வைத்தார் முக்காணி மங்கலம்.

“நான் அன்னிக்கே சொன்னேனோல்லியோ மண்புழு இருந்தாக் காய்கறித் தோட்டத்துக்குப் பேஷாவரும்னு பெரியவா தெரியாமேயா சொன்னா? படு ஜோரா வந்திருக்குடா உன் காய்கறித் தோட்டம்” என்றார் ரங்க நாராயண அய்யர்.