பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. தூக்கம்

தேச யாத்திரை செய்ய நாள், நட்சத்திரம், போக்குவரத்து வசதிகள், செலவுக்குப் பணம் என்ற இந்த விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தைரியமாகப் பிரயாணம் செய்கின்ற கூட்டத்தில் திடீரென்று இந்த நான்காண்டு காலத்திற்குள் சில ஆயிரம் மக்கள் சேர்ந்தார்கள் - அவர்கள் யார்? - கைத்தறி நெசவாளிகள். அவர்களில் ஒருவன்தான் தங்கசாமி.

தங்கசாமி! - அவனுடைய உடலிலே ஒரு குண்டுமணி எடை பொன் கூட ஒட்டியிருக்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் மட்டும் அவன் பெயரைப் போலவே தங்கமாக இருந்தது. அதோடு அவன் மனைவி தங்கத்திற்கும் அவன் சாமியாக இருந்தான்.

பணத்திற்கு மதிப்புத் தருகின்ற உலகத்தில் அவன் குணத்திற்கு யார் மதிப்புத் தரப் போகிறார்கள்? அதனால்தான் அவன் தேச யாத்திரை செய்யப் புறப்பட்டு விட்டான் பெண்டு பிள்ளை சூழ!

நூல் கிடைக்காததால் தங்கசாமி தனக்குத் தெரிந்த ஒரே தெழிலான நெசவுத் தொழிலை விட வேண்டியதாயிற்று. வாழ வேறு வழியோ, துறையோ தெரியாத காரணத்தால் அவனும் இந்தக் கூட்டத்தில் சேர்ந்து விட்டான்.

மழையை நம்பிப் பயிரிடும் உழவனைப் போல், நூலை நம்பி தறியிலே உழைத்தவன்தான் தங்கசாமி. அவனது பொருள் சில தறிகள், ஒரு சிறிய வீடு ஆக இவ்வளவுதான். இந்த ஆஸ்திகளோடு அவன் தன் உழைப்பையும் மூலதனமாக வைத்துக் கொண்டு வயிறு வளர்த்து வந்தான். நூல் தட்டுப்பாடு வந்தது; மாதத்திற்குச் சில நாட்கள் உண்ணா நோன்பிருக்கக் கற்றுக் கொண்டான். நூலே கிடைக்கவில்லை - அதனால் தறி போடவில்லை.அதைத் தொடர்ந்து தங்கசாமியின் வாழ்க்கைத் தேரும் அசைய மறுத்து விட்டது. தேர் ஓடாது என்று தெரிந்து கொண்டதும்தான் அவனும் அவன் மனைவியும் தங்கள், தங்கள் கால்களை நம்பிப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

அவர்கள் துவக்கிய பயணத்தில் திட்டமோ, குறிக்கோளோ இருக்கவில்லை. எங்கெங்கோ சுற்றினார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டார்கள். சத்திரம், சாவடிகளிலே அதைக் கட்டி வைத்த புண்யவான்களை வாழ்த்திக் கொண்டு குடியிருந்தார்கள்.

ஊரிலே நன்றாக வாழ்ந்த காலத்தில் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பக்கத்து வீட்டாருடன் பெரிதாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் தங்கசாமியும் அவன் மனைவியும். ஆனால் இப்பொழுது நடந்து விட்ட எவ்வளவோ பெரிய தவறுகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு சகித்திருந்தார்கள். காலம் அவர்களுக்குச்