பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

நீலப் பசும் மலைச் சிகரங்களிலிருந்து தொலைவில் தெரியும் நெருப்புப் புள்ளிகளைப் நிறைந்த பாத்திகளுக்கு நடுவே சிவப்புக்கள் தெரிந்தன. தக்காளி பழுத்தது. அந்த முண்டும் முடிச்சுமான சிவப்பு நிறப் பழங்களுக்குத்தான் எத்தனை கவர்ச்சி?

அந்தச் சிறிய காய்கறித் தோட்டத்தில் பாத்திகள் அமைந்திருந்த விதத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. தெற்கே தக்காளிச் செடிகள், வடக்கே வெண்டைச் செடிகள், கிழக்கே வெந்தயம், கொத்துமல்லி - மேற்கே கீரை வகைகள். இன்னும் இரண்டொரு நாளில் விற்பனைக்குப் பறித்துக்கொண்டு போகலாம் என்று தீர்மானித்திருந்தான் வேலையன்.

அப்படியிருக்கும்போது அன்று பொழுது விடிந்ததும், தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அவனுக்கு அங்கே ஒர் அதிர்ச்சி காத்திருந்தது.

வெண்டைச் செடிகளில் வெண்டைக்காய் திருடு போயிருந்தது. தக்காளிப் பாத்தியில் தக்காளிப் பழங்கள் திருடு போயிருந்தன. கீரைப் பாத்தியில் கீரை குறைந்திருந்தது. வெந்தயக் கீரையும், கொத்துமல்லிக் கீரையும் யாரோ பாத்தியில் இறங்கிக் கொஞ்சம் பறித்துக் கொண்டு போயிருந்தார்கள். வேலையன் திகைத்தான். அத்தனை நாளுமில்லாமல் அன்று திருடுபோக ஆரம்பித்த காரணம் அவனுக்கு விளங்கவில்லை. இயற்கையாகவே அவன் நிலத்துக்குப் பாதுகாப்பும், காவலும், அதிகம். நான்கு புறமும் பெரிய பண்ணையார்களின் நிலங்கள். அவர்களுடைய நிலத்தைக் காவல் செய்ய ஏராளமான காவல் ஆட்கள் உண்டு. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, எந்தப் பக்கத்திலிருந்து அவன் காய்கறித் தோட்டத்திற்குத் திருட வரவேண்டுமானாலும் காவலைக் கடந்துதான் வர முடியும்! பெரிய பண்ணையார்களின் வாழைத் தோட்டத்தையும், கரும்புக் கொல்லையையும், நெல் வயல்களையும் கடந்து வந்து அவனுடைய காய்கறித் தோட்டத்தில் சேகாரம் செய்து கொண்டு போவதென்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அவ்வாறிருக்கும் போது காய்கறிகளும், கீரையும், எப்படித் திருடு போயிருக்க முடியுமென்று அவனுக்கு விளங்கவில்லை.

அன்று இரவு முழுவதும் அங்கேயே காவல் இருந்து அந்தத் திருட்டைக் கண்டு பிடிக்க விரும்பினான் அவன். அவனது ஐந்து செண்டு நிலத்தில் ஒரு கோடியில் அடர்ந்து வளர்ந்த மஞ்சள்நாறி மரம் ஒன்று இருந்தது. இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டுகையில் பூண்பிடித்த கிளுவைக் கம்புடன் வயலுக்குப்போய் அந்த மஞ்சள் நாறிமரத்துக் கிளையில் ஏறி மறைந்து உட்கார்ந்து கொண்டான். கிளைகளை அடர்ந்து தழுவியிருந்த பசுமை அவன் உட்கார்ந்திருப்பது கீழே தெரியாமலும், கீழே அவன் காணமுடிந்தபடியும் வகையாக அமைந்திருந்தது. நல்ல நிலாக் காலம். பாற்கடலில் நனைத்துப் பரப்பிய ஒவியம்போல் வயல் வெளிகளும், வாழைக்காடும், கரும்புக் கொல்லையும், மரங்களும், அழகாகத் தெரிந்தன.