பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மண் புழுக்கள் 309

வேலையன் மரத்திலேயே இருந்து விழிப்பாகக் கண்காணித்துக் தொண்டிருந்தான். நாழிகைகள் ஒவ்வொன்றாய் நழுவிக் கொண்டிருந்தன.

விடிவதற்குச் சிறிது நாழிகைக்கு முன் வாண்டையாரின் குரல் வாழைத் தோட்டத்தருகே கேட்டது. அவரும் அவருடைய வாழைத்தோப்புக் காவல்காரன் பக்கிரியும் பேசிக் கொண்டே நடந்து வருவதை மரத்திலிருந்தபடியே கவனித்தான் வேலையன். அவர்கள் இருவரும் அவன் ஏறியிருந்த மஞ்சள் நாறி மரத்தடியிலே வந்து நின்றனர். "டேய், பக்கிரி இந்தப் பாத்தியிலே இறங்கி, ஒரு கட்டுக் கொத்து மல்லிக் இரையும், வெந்தயக் கீரையும் பிடுங்கிக் கொண்டா. எப்படியிருக்குன்னு பார்க்க, நேற்றுக் கொஞ்சம் கொண்டு போனேன். நல்ல ருசி.” என்று தம் காவல்காரப் பக்கிரிக்கு ஆணையிட்டார் வாண்டையார்.

பக்கிரி பாத்தியில் இறங்கித் தாறுமாறாக உழப்பிக் கீரையும், கொத்துமல்லியும் பிடுங்கிக் கொண்டு வந்தான்.

"விலைக்கு வாங்கறதாயிருந்தா நாலும், நாலும், எட்டணாவாவது கேட்பான்! பயல் தோட்டம் போட்டாலும் போட்டான்; நமக்கு யோகம்” என்று கூறிச் சிரித்துக் கொண்டே வாண்டையார் கீரையும் கொத்துமல்லியும் வாங்கி மேல் துண்டில் மறைத்தவாறு நடந்தார். பக்கிரி பின் தொடர்ந்தான்..

சிறிது நேரம் கழித்து 'முக்காணிமங்கலமும்' அவருடைய கரும்புத் தோட்டத்துக் காவலாளும் அந்தப் பக்கமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள். வேலையன் இன்னும் மரத்தின் மேலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான். .

“டேய்? சாம்பான்; இந்தப் பக்கமாகக் கீரைப் பாத்தியிலே இறங்கி ஒரு கட்டு முளைக்கீரை பிடுங்கு பார்க்கலாம்” என்று தம் காவலாளை ஏவினார் முக்காணி மங்கலம். அவன் இறங்கிப் பிடுங்கிக் கொண்டு வந்தான். அவர்கள் இருவரும் போன சிறிது நேரத்தில் புலிவலம் வந்த நல்லூர் வந்தார். அவர் தனியாகவே வந்ததால் தாமே இறங்கிமேல் வேஷ்டி நிறைய வெண்டைக்காய் பறித்துக் கொண்டு திரும்பினார்.அவர் தலை மறைந்ததும் ரங்க நாராயண ஐயர் வந்து ஒரு துணிப் பை நிறைய அவசர அவசரமாகத் தக்காளிப்பழங்கள் பறித்துக் கொண்டு புறப்பட்டார். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. வேலையன் மஞ்சள் நாறிமரத்திலிருந்து கிழே இறங்கிக் காய்கறித் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தான். சோரம்போன தோற்றத்தில் அது தாறுமாறாகக் காட்சியளித்தது.அவன் நெஞ்சில் உணர்ச்சிகொதித்தது. கைகள் துடித்தன.தோள்கள் புடைத்தன. ஏழைமையை நினைத்து அடங்கினான். வாண்டையார் வீட்டு வாழைத் தோட்டத்தில் களவு போகாமல் காக்கக் காவலாள் இருக்கிறான். முதலியார் வீட்டுக் கரும்புக் கொல்லைக்கும் காவல். பண்ணையார் வீட்டுநிலத்துக்கும், ஐயர் வீட்டு நெல் வயலுக்கும், எல்லாவற்றுக்கும் கட்டு உண்டு. காவல் உண்டு!

அவன் சொத்து மட்டும் எடுப்பார் கைப் பிள்ளையா? செல்வமும், செல்வாக்கும் இல்லாவிட்டால் மனிதனாகவே பிறக்கக்கூடாது' என்று பிறவியின் மேலேயே அடக்கவும், தாங்கவும் முடியாததொரு வெறுப்பு அவனுக்கு உண்டாயிற்று.