பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39. ஆலமரம்

“தம்பீ பொன்னம்பலம், அதோ மேல் வரிசையில் அந்தக் கோடியில் பெரிய புராண ஏடு எப்படி இரண்டுங் கெட்டானாய் துருத்திக் கொண்டிருக்கிறது பார்! தப்பித் தவறிக் கீழே விழுந்தால் என்ன ஆவது? மடல்கள் முறிந்து ஏடு குட்டிச் சுவராய்ப் போய் விடும். அருமை தெரியாத பையனாயிருக்கிறாயே...? பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிற ஐசுவரியமெல்லாம் இந்த ஏடுகள்தாம்...” கிழவரின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் போய் விட்டான் பொன்னம்பலம்.

கிழவர் அம்பலவான தேசிகர் நோய்ப் படுக்கையில் கிடந்தவாறே அலுத்துக் கொண்டார். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்த அந்த விசாலமான அறையில் நாற்புறமும் மரச் சட்டங்கள் அடித்து ஏட்டுச் சுவடிகள் வரிசை வரிசையாய் மேலும் கீழுமாய்ச் சிறிதும், பெரிதுமாய் அடுக்கப்பட்டிருந்தன. ஓலைகள் அதிகமாகப் பழுப்படைந்து கறுத்துத் தெரியும் மிகப் பழைய சுவடிகள் ஒரு புறம் அருமையும், பெருமையுமாகக் கொண்டாடி விழிகளின் மங்கிய பார்வையால் அந்த ஏடுகளை ஏக்கத்தோடு பார்த்தார் அவர்.

“இப்போது எனக்கு மட்டும் எழுந்து நடமாடத் தெம்பிருந்தால், நானே அத்தனை ஏடுகளையும் துாசி தட்டிப் பிரித்து உதறி அடுக்கி வைத்து விடுவேன். வயதானவன் வார்த்தைக்கு யார் மதிப்பு வைக்கிறார்கள்? கால் நாழிகையாய் இந்தப் பெரிய புராண ஏட்டை நேரே எடுத்து வைக்கச் சொல்லிக் கூப்பாடு போடுகிறேன். ஏனென்று கேட்பதற்கு ஆள் இல்லை. யாரைச் சொல்லி என்ன? இனிமேல் எல்லாம் அப்படி அப்படித்தான்! வயசும், மூப்பும் வந்து விட்டால் மனிதனுடைய வார்த்தைக்கு மதிப்பு ஏது?” என்று படுக்கையில் புரண்டவாறே முணுமுணுத்துக் கொண்டார். அவருடைய முணுமுணுப்பை அரை குறையாகக் காதில் வாங்கிக் கொண்டே கிண்ணத்தில் கஞ்சியோடு உள்ளே நுழைந்தான் பொன்னம்பலம்.

“தள்ளாத வயதில் ஏன் இப்படி ஏடு ஏடு என்று உயிரை விடுகிறீர்கள்? தலையிலேயா கட்டிக் கொண்டு போகப் போகிறீர்கள்? எல்லாம் இருந்த இடத்திலேயே பத்திரமாக இருக்கும். பேசாமல் படுத்துக் கொண்டிருங்கள்” என முகத்தைச் சுளித்து அவரைக் கடிந்து கொண்டான், மகன். படுக்கையில் ஒருக்கொளித்தாற் போல எழுந்து அவன் ஆற்றிக் கொடுத்த கஞ்சியைக் குடித்து விட்டு, “உனக்குத் தெரியுமா அப்பா இதன் அருமை: பாடுபட்டுச் சேர்த்துப் பாதுகாத்தவன் நான். ஒரு ஏடு அசைந்தாலும் எனக்கு மனம் பதறுகிறது” என்றார்.