பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“உங்கள் ஏட்டையாரும் அள்ளி விழுங்கி விட மாட்டார்கள். உடம்பை அலட்டிக் கொள்ளாமல் படுத்துக் கொள்ளுங்கள்” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு காலியான கஞ்சிக் கிண்ணத்தோடு வெளியேறினான், மகன்.

“நீ பேசுகிறதை எல்லாம் கேட்டுக் கொண்டு கிடக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன் பார். பொறுத்துக் கொள்கிறேனப்பா எனக்கு ஏலாமை, போதாக் குறைக்கு நோக்காடு வேறு. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என் தலைமறைந்த அப்புறம் இந்த ஏடெல்லாம் என்ன கதியாகப் போகின்றனவோ?’ என்று ஆற்றாமையோடு மெல்லக் கூறிக் கொண்டார் தேசிகர்.

இரண்டாண்டு காலமாக அவருடைய பழக்கமெல்லாம் அந்த அறையளவில் சுருங்கி ஒடுங்கிவிட்டது. எழுந்து நடமாட முடியாது. காலில் வாதம், நீரிழிவுத் தொல்லையும் அதிகம். கோதுமைக் கஞ்சி, கோதுமைச் சோறு, கேழ்வரகுக் கூழ், இவற்றைத் தவிர வேறெதையும் சாப்பிடக் கூடாதென்பது டாக்டருடைய உத்தரவு. எழுபத்தெட்டு வயதுக்குத் தள்ளாமை கொஞ்சமா? கண் பார்வை மங்கல் சாதாரணமாகவே கனத்த கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தவருக்குப் படுத்த படுக்கையான பின் கண்ணாடி இருந்தாலும் ஆள் அடையாளம் தெரியச் சிரமமாயிருந்தது. ஆனாலும் ஏடுகள் இருக்கிற இடங்களும் வரிசையும் பெயரும் அத்துபடி கண்ணை மூடிக்கொண்டு இன்ன இடத்தில் இன்ன ஏடு இருக்கிறது என்று கை நீட்டி எடுத்துவிட முடியும். அறையின் மேலக் கோடியில் எடுத்துக் காட்டிய காரைச் சுவரோடு தெரிகிறதே, அது நெற்களஞ்சியம். வீட்டின் வருடாந்திரத் தேவைக்கு அறுவடைக் காலத்தில் நெல் நிரப்பவேண்டியது. நெற்களஞ்சியமும், ஏடுகள் நிறைந்த தமிழ்க் களஞ்சியமும் அருகருகே இருந்தன. நெற்களஞ்சியம் வற்றிய வருடங்களும் உண்டு.ஆனால், அந்தக் குடும்பத்தில் தமிழ்க் களஞ்சியம் வற்றியதில்லை. அவருடைய தலைமுறையில் அவர் காலமுள்ளவரை வற்றாது அது!

தலைமுறை தலைமுறையாகத் தமிழையும் புலமையையும் வளர்த்து வாழ்ந்த மரபு அவருடையது. தேசிகரின் தந்தை வீரபத்திர தேசிகர் சதாவதானி. தாத்தா தொல்காப்பியமும், சங்க நூல்களும் எழுத்தெண்ணிப் படித்தவர். ஒரு பெரிய சமஸ்தானத்தில் பேரும் புகழும் பெற்று அவைப் புலவராயிருந்தார் அவர். வீட்டிலுள்ள ஏடுகளெல்லாம் முப்பாட்டனார் காலத்திலிருந்து கைப்பழக்கத்திலிருந்து வருபவை. அந்தக் குடும்பத்தின் செல்வமும், நிலங்கரைகளும் எத்தனையோ வகைகளில் குறைந்தும், நலிந்தும் ஏழ்மையடைந்ததுண்டு. ஏடுகள் மட்டும் அன்று முதல் இன்று வரை அழியாச் சொத்து. ஏடுகளைப் பேணிப் போற்றிக் காப்பாற்றுவதற்குத் தான் எத்தனை பக்குவங்கள்? எழுத்து மங்கிவிடாமலிருக்கப் பூவரசம் பட்டையும், கரியும், மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும். ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பூச்சி கரையான் அரித்து மொத்தமாகக் கட்டை போலாகி விடாமலிருக்க அடிக்கடி பிரித்து உதறி மண்ணெண்ணையில் அலசிக் கட்டிவைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் சரஸ்வதி பூஜையின்போது அந்த வீட்டில் ஏடுகளுக்கு இத்தனை மரியாதையும் உண்டு. ஏதோ பெரிய திருவிழாக்