பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஆலமரம் 313

கொண்டாட்டம்போல் அந்த வீட்டில் சரஸ்வதி பூஜை நடத்துவது வழக்கம். சங்க நூல்களிலிருந்து பிற்காலப் பிரபந்தங்கள் வரை எல்லா ஏட்டுச் சுவடிகளும் அங்கு இருந்தன. அச்சுப் புத்தகங்கள் வருமுன் தமிழை முறையாகப் படித்த எத்தனையோ பழம் புலவர்கள் அந்தச் சுவடிகளை வைத்துக் கொண்டுதான் படித்தார்கள்; மனனம் செய்தார்கள். அவற்றை மூலமாகக் கொண்டுதான் அச்சாகி வெளி வந்தன. புத்தகங்கள். அம்பலவான தேசிகர் காலத்தில் தான் முடிந்த ஏடுகளை அவரே ஒப்பு நோக்கிப் பதிப்பித்தார்.

தமக்குப் பிறகு ஒரே புதல்வன் பொன்னம்பலத்தைத் தான்நம்பியிருந்தார் தேசிகர். ஆனால் பொன்னம்பலத்தின் படிப்பு ஆரம்பத்திலிருந்தே வேறு வழியில் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் மெட்ரிகுலேஷன் பாஸ் செய்து விட்டுத் தாலுக்காக் கச்சேரியில் குமாஸ்தாவாகப் போய் உட்கார்ந்து விட்டான். முழுதும் தமிழையே நம்பி வாழ்ந்த குடும்பத்தில் ஒரு புதியதலைமுறைக்கு அடிகோலிவிட்டான், பொன்னம்பலம். அது என்ன காரணமோ தெரியவில்லை. அவனுக்குத் தமிழில் ஒரு பிடித்தம் விழாமலே கழிந்துவிட்டது. சிறுவயதில் தகப்பனார் வற்புறுத்திக் கற்பித்த நிகண்டு, தூண்டிகை - போன்ற சிறிதளவு தமிழறிவையும் கூட ஒட்டுதலில்லாத காரணத்தால் மறந்துவிட்டான் அவன். பொன்னம்பலத்திற்கு ஒரே மகன். பத்துப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனையும் தாத்தாவின் வழியில் நெருங்க விடாமல் பட்டணத்தில் அவனுடைய மாமனோடு தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து விட்டான். பேரனுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து ஆளாக்கலாம் என்ற நம்பிக்கையும் தேசிகருக்கு இல்லை.

நடமாட்டம் ஒய்ந்து படுக்கையில் படுத்தவாறு அந்தப் பரம்பரை வளர்ந்து புகழ் பெற்றதையும் - இனி வாழப் போகிற விதத்தையும் நினைத்தபோது தேசிகருக்கு ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை அடைத்தது. இணையற்றதொரு ஞான ஒளி அந்தக் குடும்பத்திலிருந்து தம் காலத்தோடு அழிந்துவிடுமோ என்ற ஏக்கம் அவருக்கு மனச் சுமையாகவே இருந்தது. தமிழ்க் குடும்பம் என்ற வழக்குப் போய் உத்தியோகம் பார்த்துக் கை கட்டி வயிறு வளர்க்கும் சாதாரண மத்தியதரக் குடும்பங்களில் ஒன்று போல அது ஆகிக் கொண்டு வருகிறதே என்பதை நினைத்தபோது இழக்கக் கூடாத ஏதோ ஒரு பெருமையை வேகமாக இழப்பது போலிருந்தது அவருக்கு.

“நம்புவதற்கும் பெருமையாக நினைப்பதற்கும் என்ன இருக்கிறது இனிமேல்? எல்லாப்பெருமையும் ஒவ்வொன்றாக இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.நான் படுத்த படுக்கையானதிலிருந்து சரஸ்வதி பூஜை கூடச் சரியாக நடக்கவில்லை. இந்த ஏடுகளில் கைபட்டு வருடம் இரண்டுக்கு மேல் இருக்கும்! பேணுவோர் இல்லாவிட்டால் எல்லாம் அவ்வளவுதான்.காலம்தான் மாறிக்கொண்டேவருகிறதே. இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள் இப்போது? எல்லாம் அச்சில் வந்துவிட்டது.மூல நூலை மனனம் செய்யாமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு அச்சு நாகரிகம் அளித்த படிப்புச் சோம்பலை வளர்க்க வேண்டியதுதான் இனிமேல்.படிப்பு நூல்களெல்லாம் கிடைப்பதற்கு அருமையாக ஏடுகளாய் இருந்தபோது படிப்பில் பக்தி சிரத்தை