பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இருந்தது. எனக்குத் தெரிந்து இதே அறையில் தாத்தாவுக்கு முன்பு மேல்வேட்டியை அரையில் கட்டிக் கொண்டு எத்தனை ஜமீன்தார்கள் தமிழ்ப் படிக்க வந்து போயிருக்கிறார்கள். அப்பா எத்தனை பெரிய அவைகளில் சதாவதானம் செய்து வெற்றிக்கொடி நாட்டினார்! கால்மேல் கால் போட்டுக் கொண்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தாரானால், தெருவில் நடந்து போகிறவன் காலில் செருப்போடு நடந்துபோக மாட்டான். அப்படி ஒரு பெருமை! அப்படி ஒரு செல்வாக்கு அறிவின் கெளரவத்தால் ஊரையே பெருமைப்படுத்தி வந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதே! எழுபத்தைந்து ரூபாய் காசுக்காகத் தாலுக்காக் கச்சேரிக்கு நடையாய் நடக்கிறான் இவன்.

என்ன பெருமையோ? என்ன கெளரவமோ? அப்பா வாசற்படிக்குக் கீழே தெருவிலிறங்கி நடந்தறிய மாட்டார். எங்கே போக வேண்டுமானாலும் ஜமீன்தார் அனுப்பிய பல்லக்கும், ஆட்களும், வாசலில் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வார்த்தை சொல்வி அனுப்பினால் படேபடே ஜமீன்தார்கள் அவரைப் பார்த்துவிட்டுப்போக இங்கே தேடிக் கொண்டு வருவார்கள்.இந்தக் காலத்தில் அங்கே தான் என்ன வாழ்கிறதாம்? ஜமீன் விருப்பு எல்லாம் ஒடுங்கி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எல்லாம் சர்க்கார் பிடுங்கிக் கொண்டு விட்டார்கள். என் காலத்திலேயே ஜமீன் ஆதரவு குன்றிப் புத்தகம் அச்சுப் போட்டு விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை எனக்கு வந்து விட்டதே இந்த நோக்காடுகளெல்லாம் வந்து ஆளைப் படுக்கையில் கிடத்தியிருக்காவிட்டால் இன்னும் கொஞ்சநாளைக்கு ஏட்டைப் புரட்டி ஏதாவது முடிந்த மட்டில் செய்து கொண்டிருக்கலாம். பேரப்பிள்ளையாண்டானுக்கு எங்கே தமிழைச்சொல்லிக் கொடுத்துப் பழைய பஞ்சாங்கமாக்கிவிடப் போகிறேனோ என்று பட்டணத்து மாமன் வீட்டில் இங்கிலீஷ் படிப்புக்கு அனுப்பிவிட்டான். ஏனென்று கேட்க யார் இருக்கிறார் இங்கே?'அந்த ஏட்டை நேரே எடுத்துவை' என்று மூன்று நாளாக முட்டிக் கொள்கிறேன். கவனிப்பாரில்லையே? கையாலாகாமையும், மூப்பும் வந்துவிட்டால் வாயைத் திறக்கக்கூடாது. திறந்தால் மரியாதை போய்விடும். இருக்கிறவரை கிடைக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு மானமாக இருந்துவிட்டுப் போய்விட வேண்டும்.

தேசிகர் மார்பு மேலெழும்பித் தணிய பெருமூச்சு விட்டார். கம்பளிப்பூச்சி பட்ட இடத்தில் அரிக்கிற மாதிரி மனத்தில் வேதனை அரித்தது. ஆலமரம்போல் வரி வழியாக விழுதுான்றி வளர்ந்த இந்த மரபு அழிய வேண்டியது தானா? எத்தனை இலக்கண - நுணுக்கங்கள்? எல்லாவற்றையும் எண்ணோடு சாகவிட வேண்டியதுதானா? இந்த ஞான வித்துக்களை விதைத்துவிட்டுப் போக நிலமில்லையா? என்று ஏங்கினார். கப்பும் கவடுமாகக் கிளைவிட்டு ஊன்றிப் படர்ந்த பெரிய ஆலமரமொன்று ஆணிவேரற்று முறிந்து விழுவது போல் மானசீகமாக ஒரு தோற்றம் தேசிகருக்கு உண்டாயிற்று. அதைக் கற்பனை செய்து பார்க்கும்போதே மனதுக்குக் கஷ்டமாக இருந்தது அவருக்கு. எங்கும் கிடைக்காத அரிய மருந்துச் செடியைப் பிடுங்கி எறிந்து அழிப்பதுபோல் வேதனை தந்தது. அவருடைய தந்தை