பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ஆலமரம் * 315

வீரபத்திர தேசிகர் மரணப் படுக்கையிலிருந்து கொண்டே அவரிடம் கடைசியாகக் கூறிவிட்டுப் போன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன."அடே: அம்பலவானா இந்தக் குடும்பத்துக்கு நான் நிலமும், நீச்சும், ரொக்கப்பணமும் சேர்த்துவைத்து விட்டுப் போகவில்லை. இந்த ஏடுகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் போகிறேன். உன் தாத்தா எனக்குச் சேர்த்து வைத்தது இதுதான். இதையே உனக்கு நான் வைத்துப் போகிறேன். இந்தக் குடும்பத்தின் ஞானம் மணக்கும் பெரியவர்களின் கைகளெல்லாம் தொட்டுப் பழகிய ஏடுகள் அப்பா இவை இந்த வீட்டின் அழியாத மங்கலப் பொருள்கள் இவை. இவற்றைக் காப்பாற்று. இவற்றால் உன்னைக் காப்பாற்றிக் கொள்..” என்று அம்பலவான தேசிகரின் தந்தை சிவபதமடையுமுன் அவரிடம் கூறிவிட்டுப் போனார். தாம் சிவபதமடையுமுன் 'இதே வார்த்தைகளை யாரிடம் கூறமுடியும்?' என்று எண்ணியபோது தேசிகருக்குக் கண்களில் நீர் கசிந்தது.தாலுக்காக் கச்சேரியில் அடிமை வேலை பார்க்கும் மகனிடம் கூறினால் அதைப் பொருட்படுத்திக் கேட்கவே மாட்டானே!

காலால் அறைக் கதவை உதைத்துச் சாத்திவிட்டுத் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு ஒசைப்படாமல் மெல்ல குமுறியழுதார் தேசிகர். உடல் ஒய்ந்து, படுக்கையில் கிடந்து அழுவதுதான் ஆறுதலாக இருந்தது அப்போது. மனிதனுடைய ஆற்றாமைக்கு அழுகைதான் எல்லை. வேதனைகளை மன விளிம்பில் ஒன்று கட்டிக் கொண்டு மெளனமாக யாருக்கும் தெரியாமல் அழுது கரைவதில் ஒரு ஆத்மிகமான சுகம் இருந்தது.ஒவ்வொரு மனிதனும் எல்லையற்ற நாள் வெள்ளமானதன் வாழ்நாளில் ஒருநாள் ஒரு விநாடியாவது இப்படி அழ வேண்டிய அவசியம் உண்டு.

கதவு 'கிறீச்'சிட்டது.அறை வாசலில் நின்றுகொண்டு உட்புறமாகக் கதவை யாரோ மெல்லத் தள்ளினார்கள்.தேசிகர் கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து படுத்தார்.

“யாரது?”

“நான்தான் தாத்தா, சரவணன். உள்ளே வரலாமா?”

‘'நீ எப்போதடா பட்டணத்திலிருந்து வந்தாய்? நீ வரப்போவதாக உங்கப்பா என்னிடம் சொல்லவேயில்லையே? வா. இப்படி உள்ளே வந்து உட்கார்ந்து கொள்.” என்று வியப்புத் தொனிக்கக் கூறிவிட்டுப் பேரப்பிள்ளையைப் பார்க்கும் ஆவலோடு கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார்.

"கோடை விடுமுறைக்காக இரண்டு மாதம் லீவு தாத்தா. பட்டணத்திலேயே இருந்து அலுத்துப் போயிற்று. மாமாவை ரயிலேற்றிவிடச் சொல்லிப் புறப்பட்டு வந்தேன். நான் வரப் போவதாக அப்பாவுக்கே முன் தகவல் தெரியாது.” ஒரு சீப்பு மலைவாழைப் பழத்தையும் இரண்டு சாத்துக்குடியையும் தாத்தாவுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு அருகில் உட்கார்ந்தான் பேரக் குழந்தை. பையன் பார்க்க அழகாக இருந்தான். புறங்கிப் பூப்போல் சிவப்பு, களையான முகம், அந்தக் குடும்பத்து முத்திரையான கூர் மூக்கு சுருள் சுருளான கிராப்புத் தலை, இடுப்பில் நிஜாரும், உடம்பில் அரைக்கைச் சட்டையும் இலங்க அந்தக் கோலத்தில் பையன் பார்க்க,