பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


நன்றாக இருந்தான். நகர்ப் புறத்தில் வளர்ந்த மினுமினுப்பும் தெளிவும் முகத்தில் தெரிந்தன.

"இப்போது எந்த வகுப்புப் படிக்கிறாயடா குழந்தை”

“ஃபோர்த் பாரம் படிக்கிறேன் தாத்தா.”

"நன்றாகப் படிக்கிறாயோ?”

சிறுவன் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டான்.

"நீ படிக்கிறாயே இப்போது இந்தப் படிப்பிலே தமிழெல்லாங் கூட உண்டா குழந்தை?"

“நிறைய உண்டு தாத்தா கம்பராமயணத்திலே குகப்படலம். இளையான்குடிமாற நாயனார் புராணம் - குறள், நாலடியார் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார். தாத்தா.

"அப்படியா? எங்கே? குகப் படலத்திலே ஒரு பாட்டுச் சொல்லு; பார்க்கலாம்.”

"அல்லையாண்டமைந்த மேனி அழகனும் அவளும்." பையன் பாடி முடித்தான். அவனுடைய வாக்கு கணிரென்று சுத்தமாக ஒலிப் பிழையின்றி இருந்தது.

“ஏண்டா குழந்தை? இப்படியே இராகத்தோடு சொல்லிக் கொடுக்கிறார்களா, உனக்கு?"

“இல்லை தாத்தா பள்ளிக் கூடத்தில் பாட்டு மட்டும் சும்மா பதம் பிரித்துச் சொல்லிக் கொடுப்பாங்க பட்டணத்திலே மாமா குடியிருக்கிற தெருவிலே கவிஞர் நினைவு மன்றம்’னு ஒரு சங்கம் இருக்கு. அதிலே அடிக்கடி பெரிய பெரிய புலவர்களெல்லாம் வந்து பிரசங்கம் செய்வாங்க. அங்கே ஒருத்தர் தொடர்ந்து கம்பராமாயணம் பிரசங்கம் செய்தார். அவர் பாட்டெல்லாம் இப்படித்தான் ராகத்தோடுபாடுவார்.

“நீ அதற்கெல்லாம் போய்க் கேட்பாயாடா குழந்தை?.”

"கேட்பேனாவது? பள்ளிக்கூடம் விட்டால் என்னை அந்தச் சங்கத்திலே தான் பார்க்கலாம் தாத்தா. பட்டணத்திலே தமிழ்ப் பிரசங்கம் எங்கே நடந்தாலும் போய் கேட்டிட்டு வந்திடுவேன்.”

“பள்ளிக் கூடத்திலே இங்கிலீஷ் படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் கேட்டு என்னடா பிரயோசனம்?”

“என்னன்னு சொல்லத் தெரியலை தாத்தா.இதெல்லாம் கேட்கணும், படிக்கனும், சிந்திக்கணும்னு எனக்கு ஒரே ஆசையாயிருக்கு. வெயிலிலே அலையறப்போ தாகமாயிருக்கிறாப் போல இதுலே ஒரே தாகமாயிருக்குத் தாத்தா போன மாசம் மாமா 'சினிமாவுக்குப் போ'ன்னு கொடுத்த காசையெல்லாம் சேர்த்துக் கொண்டுபோய் மூர்மார்க்கெட்டுலே பழைய புத்தகக் கடையிலே ஒரு நன்னூல் புத்தகம்