பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318 ✽ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பார்த்தார் அவர்.இத்தனை காலமாக மனத்தில் சுமந்து கொண்டிருந்த ஆற்றாமையும், ஏக்கமும் மறைந்து, புதிதாக ஏதோ ஒரு எழுச்சி மனத்தில் ஏற்படுவது போலிருந்தது.

அப்போது பேரன் அழைத்தான்.

“தாத்தாவ்.” அழைப்பில் எதையோ வேண்டும் குழைவு தயங்கியது.

"என்னடா குழந்தை?"

“எனக்கு நீங்க ஒரு உதவி செய்யனும்.”

“என்ன உதவி?”

"அப்பாவுக்குப் பயந்து மாட்டேங்கப்படாது...?”

"இல்லைடா செய்யறேன். என்னன்னு சொல்லு?”

"தினம் அப்பா வெளியிலே போனதும் நான் உங்க 'ரூமு’க்கு வந்திட்றேன். நீங்க எனக்கு நிறையத் தமிழ்ப்பாட்டெல்லாம் சொல்லித் தரணும். அப்பாவுக்குத் தெரியப்படாது ."

“தெரிஞ்சா என்னவாம்?”

“தெரியப்படாதுன்னாத் தெரியப்படாது. அவ்வளவு தான். தெரிஞ்சாக் கோவிச்சுக்குவாரு அந்தப் பண்டாரப் பாட்டெல்லாம் வேண்டாம்டாம்பாரு.”

“எப்பவாவது சொன்னானா அப்படி?”

“எப்பவாவதென்ன? நேத்திக்கிக் கூடச் சொன்னாரு, "சும்மாச் சும்மாத் தாத்தா ரூம்லே என்னடா வேலை? அந்தப் பண்டாரப் பாட்டெல்லாம் படிக்கவா உன்னை இங்கிலீஷ் பள்ளிக் கூடத்துல சேர்த்திருக்கு? போய் ரென் அன் மார்ட்டின்’ 'கிராமரை' எடுத்துப்படிடா கழுதை, அப்படின்னு நேத்துக் கூப்பாடு போட்டாரு”

தேசிகர் மெல்லச் சிரித்துக் கொண்டார். "ஏண்டா குழந்தை; அப்பா சொல்றபடி அதைத்தான் படியேன்! இந்தப்பாட்டெல்லாம் உனக்குத் தெரிஞ்சு என்ன ஆகணும்?"

"படிக்கணும்னு ஆசையாயிருக்கிறது தாத்தா..." அவனுக்கு அதற்குமேல் அந்த ஆசையை - அந்தத் துடிப்பை அந்தத் தாகத்தை எப்படி வெளியிடுவதென்று தெரியவில்லை. குடும்பத்தின் பரம்பரையான தமிழ்ச் செல்வம் அழிந்துவிடக் கூடாதென்று முன்னோர்களில் யாரோ ஒருவர் மறுபிறவி எடுத்து வந்து பேரப்பிள்ளையாண்டான் சரவணனாக முன்னால் நின்று கொண்டு கொஞ்சுவதுபோல தேசிகருக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. சிறுவன் சொல்லிலும், பார்வையிலும், முகத்திலும் ஏக்கம் திகழக் கிழவரைப் பார்த்தான். 'பருகுவனன்ன ஆர்வத்தனாகி' என்று நன்னூல் சொல்லியிருந்ததே, அந்த ஆர்வத்தை அந்த முகத்தில் கண்டார் தேசிகர். தலைமுறை தலைமுறையாக, பிறவி பிறவியாகக் காத்துக் கிடந்து கெஞ்சுவது போல் ஒரு தாகம் அந்தப் பன்னிரண்டு வயதுப் பிள்ளையின் கண்களில் நிலவிற்று.