பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வைச்சிட்டுப் போகலேன்னாலும், ஒண்டிக்கிறதுக்கு ஒரு சின்ன ஒட்டு விடு கையகலத்துக்கு வைச்சிட்டுப் போயிருக்கார். மேலக்கோடியிலே சின்னதா பித்தல் நார்ப்பெட்டி மாதிரி ஒர் ஒட்டுக்குச்சு - நீங்ககூடப் பார்த்திருப்பிங்க வாசல்லே எருக்கஞ்செடி மொளைச்சிருக்கும். தம்பியும், நானும் அதுலேதான் காலத்தைத் தள்ளிண்டு வரோம்.”

“சாப்பாடு?”

“நானே சமைச்சுக்குவேன். எனக்கு எல்லாம் தெரியும் சார்.!

“அது சரி! நான் இந்த வீட்டுக்குக் குடி வந்திருக்கேன்னு உனக்கு யார் சொன்னாங்க?”

“அதுவா? நேத்துச் சாயங்காலம் கிராம முன்சீப் சொன்னார். பட்டு! அந்த வேப்பமரத்தடி வீட்டுக்குப் பட்டணத்திலிருந்து ஒரு புரொபஸர் ரிட்டையராகி வந்திருக்கார். நாளைக் காலையிலே போய்ப் பாரு' என்றார். அதான் வந்தேன் சார்”

“எல்லாம் சரி. எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு எங்க வீட்டிலேயும் நீயே வேலை செய்யலாம். காலையிலே சுத்தமா வாசலைப் பெருக்கித் தெளிச்சிக் கோலம் போட்டுடனும். அப்புறம் உள்ளே மாமிக்கு ஒத்தாசையாச் சமையலுக்கு நாலு குடிம் தண்ணீர் இரைத்துக் கொடுக்கணும். சாயங்காலமும் ஒரு தரம் வீடு பெருக்கணும். இவ்வளவுக்குமாக மாசத்துக்கு உனக்கு என்ன சம்பளம் வேணும்...?”

"அதுதான் நான் அப்பவே சொன்னேனே, சார் சம்பளம்னு பெரிசா ஒண்ணும் கேட்கமாட்டேன். நீங்க கொடுத்ததைத் திருப்தியா வாங்கிப்பேன். சம்பளமா பெரிசு? மனுஷாள்தான் வேணும்?"

சிற்சபேசன் அதிசயித்தார். ஏழைமை அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு விநயமாகப் பேசும் பழக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்று எண்ணியபோது, அவருக்கு வியப்பாயிருந்தது. உலகத்தைப் புரிந்து கொண்டு சுற்றியிருப்பவர்களையும், சூழ்நிலையையும் நன்றாகத் தெரிந்து கொண்டு அந்தக் கசப்பை அங்கீகரித்துவிட்ட ஒரு தெம்பு அந்தச் சிறுமியிடம் தென்பட்டது. 'நமக்கு இதுதான் வாழ்வு - இதைக் கொண்டுதான் சமாளித்துக் கொள்ள வேண்டும்’ என்கிற மாதிரி ஒரு நிறைவை அவளிடம் காணமுடிந்தது.

“சரி, குழந்தை இன்னியிலிருந்து காரியத்தைப் பாரு, நான் பாத்துக் கொள்கிறேன்” என்றார் சிற்சபேசன். பட்டு நெடுநாட்கள் அந்த வீட்டில் பழகிய வேலைக்காரியைப் போல், சிற்றாடை நுனியை இழுத்துச் செருகிக்கொண்டு வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள்.

சிற்சபேசன் வீட்டுக்குள் போய்க் காப்பி குடித்துவிட்டு, மனைவியிடம் வேலைக்காரச் சிறுமி கிடைத்த பெருமையை அளந்தார். மறுபடியும் திரும்பி அவர் வாசற்பக்கம் வந்தபோது தரையில் விளக்குமாறு புரளும் பெருக்கல் ஒசை