பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி/வேப்பம் பழம் * 323


கேட்கவில்லை. வேப்பமரத்தடியில் குனிந்து எதையோ பொறுக்கி எடுத்து ஒவ்வொன்றாக வாயில் போட்டுச் சுவைத்துத் துப்பிக் கொண்டிருந்தாள் பட்டு.

“எதையோ பொறுக்கிச் சாப்பிடுகிறாயே..? அதென்னது?”

“வேப்பம் பழம் சார்! எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த மரத்தடியிலே நிறைய உதிர்ந்திருக்கு."

“வேப்பம் பழமா?. ஐயையே. கசக்காதோ உனக்கு?”

“கசப்பு உடம்புக்கு நல்லதாம் சார்; எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். காயா இருக்கறப்போ இது விஷமாகக் கசக்கும். பழுத்திட்டால் தகதகன்னு தங்கம்போல் ஒரு நிறம் வரும். அப்போ சாப்பிட்டாக் கசப்பே தெரியாது. அசட்டுத் தித்திப்பா ஒரு இனிப்பு இருக்கும். மென்னு கடிச்சு முழுங்கிடப்படாது. இலேசாச் சப்பிச் சுவைத்து விட்டுத் துப்பிடணும்.”

“எங்கே, இப்படி ஒண்ணு கொடு; பார்க்கலாம்.” சிற்சபேசன் பட்டுவுக்கு முன்னால் வந்து கையை நீட்டினார்.

“வேண்டாம், ஸார்! பழக்கமில்லாட்டாக் கசப்பு ஒட்டாது. குடலைக் குமட்டிண்டு வாந்தியெடுக்க வரும்.”

"கொடேன். பார்க்கலாம்.”

பட்டு சொன்னது மெய்யாகிவிட்டது. பழத்தை வாயில் போட்டுக் கொண்ட மறுகணமே, குமட்டலோடு காறித் துப்பினார் சிற்சபேசன். “நல்ல காப்பி சாப்பிட்ட மணத்தையெல்லாம் கெடுத்து வாயை நாற அடித்துவிட்டதே. இந்தப் பாழும் வேப்பம் பழம்" என்றார்.

“நான்தான் மொதல்லேயே சொன்னேனே, சார்! பழகாட்டாக் கசப்பு ஒட்டாதுன்னு. எனக்கு ரொம்ப நாட்களாகவே இந்தப் பழத்தைச் சாப்பிட்டுப் பழக்கம். ஒரே சமயத்திலே பத்துப் பன்னண்டுகூடச் சாப்பிடுவேன்.”

வேப்பம் பழத்தைச் ‘சாக்லேட்'டாக விழுங்கும் அந்த அதிசயச் சிறுமியின் பழக்கத்தை வியந்து கொண்டே, வாயைக் கொப்பளிக்க உள்ளே சென்றார் சிற்சபேசன். வாயைக் கொப்பளித்துக் கழுவிய பின்னும் அந்தக் கசப்பும், கமறல் நாற்றமும் போகவில்லை. வெகு நேரம் காறித் துப்பிக் கொண்டே இருந்தார். வாசல் தெளித்துக் கோலம் போட்டு வீடு பெருக்கித் தண்ணிர் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பட்டு போய்விட்டாள். போகும் போது "வரேன் மாமி, வரேன் சார்” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்துச் சொல்லிக் கொண்டு போனாள். அந்தக் குரலில் ஒடியாடி வேலை செய்த களைப்பின் சலிப்போ, அலுப்போ இல்லை. யாரோ உறவுக்காரப் பெண், பார்க்க வந்துவிட்டுச் சொல்லிக்கொண்டு போகிற மாதிரி ஒரு தன்மையான சுபாவமான இனிமை இருந்தது.

சிற்சபேசனிடமும், ஶ்ரீமதி சிற்சபேசனிடமும் பட்டு நல்ல பேரெடுத்துவிட்டாள். "இந்தப் பொண்ணைப் பற்றி ஊரில் யாரைக் கேட்டாலும் பெருமையாத்தான்