பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325✽நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


சொல்றா. சின்ன வயசிலேயே குடும்பக் கஷ்டம் தெரிஞ்ச பொண்ணாம். அப்பா, அம்மா, ஒருத்தர் இல்லாமே ஒண்டியாத் தானும் பிழைத்துக்கொண்டு, நாலு வீட்டிலே காரியஞ் செஞ்சு தம்பியையும் காப்பாத்தறதாம்” என்று முதல்நாளே பட்டுவைப் பற்றி அக்கம்பக்கத்திலே கேள்விப்பட்ட பெருமையைக் கணவனிடம் கூறினாள் ஶ்ரீமதி சிற்சபேசன்.

பட்டுவுக்கு ஊர் முழுதும் நல்ல பேர்தான். யார் எந்தக் காரியம் சொன்னாலும் தட்டமாட்டாள். அவள் முகத்தில் கடுகடுப்பையே பார்க்க முடியாது. யாரிடமும் எதற்காகவும் அலுத்துக்கொள்ளமாட்டாள்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒருநாள் சாயங்காலம் வீடு பெருக்க வரும்போது ஒரு சிறு பையனையும் அழைத்துக் கொண்டு சிற்சபேசன் வீட்டுக்குள் நுழைந்தாள் பட்டு.

“இவன்தான் சார் என் தம்பி. விசுவநாதன்னு பேரு. செல்லமா 'விச்சு'ன்னு கூப்பிடுவேன்.இவனை என்னாலே முடிஞ்ச மட்டும் ஒரு 'ஸ்கூல் பைனல்' வரையாவது படிக்க வைச்சி ஆளாக்கி விட்டுடனும்னு இருக்கேன். அதுக்காகத்தான் இத்தனை பாடு படறேன்” என்று சிற்சபேசனிடம் அந்தச் சிறுவனைக் காட்டிச் சொன்னாள் பட்டு. சிற்சபேசன் சிரித்தார். “ஏன் சார் சிரிக்கிறீங்க? என்னாலே முடியுமான்னு தானே?”

"இல்லே!'ஸ்கூல் பைனல்’னா இன்னும் ஆறேழு வருஷங்களாவது படிக்கனுமே. அதுவரை நீ இப்படியே சின்னப் பொண்ணா வீடு வீடா ஏறி இறங்கிக் காரியம் செய்ய முடியுமான்னு நினைச்சேன். சிரிப்பு வந்தது.”

"அப்படிநினைக்காதீங்க சார். என்னாலே கண்டிப்பா முடியும்.நான் நினைச்சா அதைச் செய்யாம விடமாட்டேன். எப்பாடு பட்டாவது தம்பியைக் கண்டிப்பாய்ப் படிக்க வைச்சுடுவேன் சார்.”

இதைச் சொல்லும்போது பட்டுவின் இடுங்கிய கண்களில் ஒளி மின்னியது.

“பட்டு உனக்கு நம்பிக்கை ரொம்ப இருக்கு. நீ செய்தாலும் செய்வே.”

“செய்யத்தான் போறேன், சார்! நீங்க நெறையப் படிச்சுப் பெரிய காலேஜிலே எத்தனையோ வருஷம் புரொபஸ்ரா இருந்துட்டு வந்திருக்கீங்க! உங்களோட எல்லாம் வாதாடிப் பேச எனக்குத் தெரியாது. ரத்னம் பிள்ளை அடிக்கடி முயற்சி திருவினையாக்கும் என்று ஏதோ தமிழ் வசனம் சொல்வார்.அதுலே எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை”-பதின்மூன்று வயதுப்பட்டு பேச ஆரம்பித்துவிட்டால் அந்தப் பேச்சில் நூறு வயது அனுபவம் தொனிக்கும். அப்படி ஒரு முதிர்ச்சி. அப்படி ஒரு தெளிவு.

ஒருநாள் சிற்சபேசன் தெரு வழியே போகும்போது மேலக்கோடியில் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பட்டு பார்த்துவிட்டாள்.

"சார்! சார்!...” என்று கத்தி அழைத்தாள். சிற்சபேசன் திரும்பிப் பார்த்தார்.

பக்கத்தில் வந்தார்."இதுதான் நீ இருக்கிற இடமா, பட்டு?” என்று கேட்டார்.