பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி

வேப்பம் பழம் * 325

"ஆமாம், சார்! இதுதான் எனக்கு அரண்மனை. ஒட்டுக் கூரை வெயிலுக்குக் காயும்; மழைக்கு ஒழுகும். என்ன செய்வது? அப்பாவச்சிட்டுப் போன சொத்து விடலாமோ”

“கிழக்கேயும் மேற்கேயும் வீடில்லால் இடிமனைகளாகக் கிடக்கிறதே...? தனியாப் பயமில்லாமே இதிலே உன்னாலே எப்படியிருக்க முடியறது?”

“எப்படியோ இருக்கேன், சார்! எனக்கென்ன பயம்? விச்சு துணைக்கிருக்கான். பணமா? காசா; பயப்படறதுக்கு?”

"ஆமாம்! ஊர்க்காரங்க வீடெல்லாம் வாசல் தெளிச்சுக் கோலம் போடறியே, உன் வீட்டிலே மட்டும் வாசலெல்லாம் எருக்கஞ் செடியா முளைக்க விட்டிருக்கியே!”

“அதுக்கு நேரம் ஏது சார்? எனக்குத்தான் கோழி கூப்பிடறதுக்கு முன்னேயிருந்து இருட்டறவரை வாடிக்கைக்காரங்கவீட்டு வேலை சரியா இருக்கே இங்கே தம்பிக்கும் எனக்கும் சாப்பாடு வேறே சமைக்கணுமே?” என்று சரியாகக் காரணம் சொல்வாள் பட்டு.

பேராசிரியர் சிற்சபேசன் அந்தக் கிராமத்தில் குடியேறி ஒரு வருடம் ஒடிவிட்டது. பட்டுவின் தம்பி இப்போது நாலாங்கிளாஸ் படிக்கிறான். வீடு பெருக்குகிற வேலைக்காரப் பெண்ணாக இருந்தாலும், அவள் மேல் தனி அனுதாபம் அவருக்கு உண்டு. ஒருநாள் காலை பட்டு வாசல் தெளித்து கோலம் போட வரவில்லை. விடிந்து வெகு நேரமாகிவிட்டது.


“இந்தப் பெண்பட்டு வரலியா இன்றைக்கு” என்று தம் மனைவியிடம் கேட்டார் சிற்சபேசன்.

"அந்தப் பெண் இனிமேல் வராது:”

"ஏன் அப்படி?”

பதில் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தாள் அவர் மனைவி.

“என்ன சிரிக்கிறே?”

"ஒண்ணுமில்லே” என்று சொல்லிக் கொண்டே, கணவன் பக்கத்தில் நெருங்கி வந்து தணிந்த குரலில், “பட்டு பெரிசாயிருக்கா” என்றாள் அவள்.

சிற்சபேசனுக்குத் திகைப்பு ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம். இரண்டையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அந்தப் பெண்ணுக்கு இந்த ஊரில் ஏனென்று கேட்கக்கூடத் தன் மனிதர் என்று யாருமே இல்லையே! ஒண்டியா என்னசெய்யறதோ? பாவம்.” என்று தம் மனைவியை நோக்கிச் சொன்னார்.

“எனக்கே இது தெரியாது! நேற்று இராத்திரி பெருமாள் கோவிலுக்குப் போயிட்டுத் திரும்பி வரபோது, அந்தப் பெண்ணோட வீட்டு வாசல்லே ஒரே பெண்கள் கூட்டமாக இருந்தது. என்னன்னு போய் விசாரித்தேன். பட்டு பெரிசாயிருக்கான்னு தகவலைச் சொன்னா. உள்ளே போய்ப் பார்த்தேன். அது ஒரு முலையில் தலையைக் குனிஞ்சிண்டு உக்கார்ந்திருந்தது.'என்னடீ பட்டு'ன்னேன்.பதில்